மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
மாறாந்தை அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டையைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் பாக்கியராஜ் (வயது 35). ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் அருமைநாயகம் மகன் பிரேம்குமார் (25). இவர்கள் இருவரும் நண்பர்கள். நெல்லையில் உள்ள தனியார் பாத்திரம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். நேற்று காலை இவர்கள் மோட்டார் சைக்கிளில் நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பிரேம்குமார் ஓட்டினார்.
மாறாந்தை அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட பாக்கியராஜ் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பிரேம்குமார் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரேம்குமாரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்த பாக்கியராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான பாக்கியராஜூக்கு இசக்கியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.