பள்ளி பஸ் சக்கரம் ஏறி தனியார் நிறுவன மேலாளர் உடல் நசுங்கி பலி
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தபோது பள்ளி பஸ் சக்கரம் ஏறி தனியார் நிறுவன மேலாளர் உடல் நசுங்கி பலி திருக்கோவிலூரில் பரிதாபம்
திருக்கோவிலூர்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நாச்சியார்பேட்டையை சேர்ந்தவர் தனசேகர் மகன் தீபத்(வயது 29). இவர் திருக்கோவிலூர் தாசார்புரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்து சந்தைப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று காலை தீபத் மோட்டார் சைக்கிளில் சந்தப்பேட்டையில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மடப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் கிருஷ்ணன்(41) என்பவர் திருக்கோவிலூரில் இருந்து சந்தப்பேட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சந்தைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய முஸ்லீம் தொடக்கப்பள்ளி அருகே வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராத விதமாக ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த தீபத் தவறி சாலையில் விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி பஸ் அவர் மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணன் மற்றும் தனியார் பள்ளி பஸ் டிரைவர் தர்மராஜ்(61) ஆகியோர் மீது திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.