பெண்ணுக்கு தனியார் பார்சல் நிறுவனம் ரூ.83 ஆயிரம் வழங்க வேண்டும்
பெண்ணுக்கு தனியார் பார்சல் நிறுவனம் ரூ.83 ஆயிரம் வழங்க வேண்டும்
திருப்பூர்
பெங்களூருவில் இருந்து திருப்பூருக்கு அனுப்பிய ஜவுளி பண்டலை வழங்காத பார்சல் நிறுவனம், பெண்ணுக்கு ரூ.83 ஆயிரத்து 545 வழங்க வேண்டும் என்று திருப்பூர் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.
தனியார் பார்சல் நிறுவனம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்த சஞ்சய்குமாரின் மனைவி சத்யா (வயது 34). இவர் கடந்த 2019-ம் ஆண்டு பெங்களூருவில் இருந்து திருப்பூருக்கு கே.பி.என்.பார்சல் சர்வீஸ் மூலமாக துணி பார்சல்கள் இரண்டை ரூ.520 கட்டணம் செலுத்தி அனுப்பி வைத்தார். ஆனால் அதில் ஒரு பார்சல் மட்டுமே வந்து சேர்ந்தது. மற்றொரு பார்சல் வரவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பார்சல் நிறுவனத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், நேரில் தொடர்பு கொண்டும் உரிய பதில் இல்லை.
இதைத்தொடர்ந்து சத்யா, கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருப்பூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்றது. இதில் சத்யாவுக்கு பார்சல் கட்டணம் ரூ.520, பார்சல் குறித்து கேட்பதற்காக சத்யா பெங்களூருக்கு சென்ற பஸ் கட்டணம் ரூ.925, பார்சலில் அனுப்பிய ஜவுளியின் மதிப்பு ரூ.22 ஆயிரம், மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ.50 ஆயிரம், வழக்கு தொகையாக ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை இன்னும் 2 மாதத்துக்குள் கே.பி.என். நிறுவனம் சத்யாவுக்கு கொடுக்க வேண்டும்.
வட்டியுடன் பணம்
2 மாதத்தை தாண்டிவிட்டால் வழக்கு தொடுத்த நாள் முதல் மேற்கண்ட அனைத்து தொகைக்கும் 9 சதவீத வட்டியுடன் பணத்தை சத்யாவுக்கு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டு தலைவர் தீபா, உறுப்பினர்கள் பாஸ்கர், ராஜேந்திரன் ஆகியோர் உத்தரவிட்டனர்.