தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 273 விநாயகர் சிலைகள் ஊர்வலம்


தினத்தந்தி 4 Sept 2022 5:29 PM IST (Updated: 4 Sept 2022 5:34 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 273 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்த 273 விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி

தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டன. வழிபாடு முடித்த பிறகு சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

அதன்படி கடந்த 2 நாட்களாக ஒவ்வொரு பகுதியாக விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, வேப்பலோடை, தூத்துக்குடி, முத்தையாபுரம் பகுதிகளில் மொத்தம் 273 விநாயகர் சிலைகள் நேற்று கடலில் கரைக்கப்பட்டன.

தூத்துக்குடி மாநகர இந்து முன்னணி சார்பில் 49 பெரிய விநாயகர் சிலைகள் மற்றும் ஒரு அடி உயரம் கொண்ட சுமார் 50 சிலைகளும் கடலில் கரைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக தபசு மண்டபம் அருகே கொண்டு வரப்பட்டன. பின்னர் ரதவீதிகளில் விநாயகர் சிலைகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. பின்னர் விநாயகர் சிலை ஊர்வலம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

கரைப்பு

நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்துகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் என்.சிவக்குமார், எம்.மாரியப்பன் மாவட்ட செயலாளர்கள் கே.எஸ்.ராகவேந்திரா, எஸ்.பி.சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் கலந்து கொண்டு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பா.ஜனதா கட்சி மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், துணைத்தலைவர்கள் எஸ்.பி.வாரியார், சிவராமன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஊர்வலம் வடக்கு ரதவீதி, காசுக்கடை பஜார், மட்டக்கடை, பீச் ரோடு வழியாக திரேஸ்புரம் சங்குமுக கடற்கரையை வந்தடைந்தது. அங்கு விநாயகர் சிலைகள் படகுகள் மூலம் கடலுக்குள் எடுத்து சென்று கரைக்கப்பட்டன.

இதே போன்று இந்து மக்கள் கட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக எடுத்து சென்று தூத்துக்குடி கடலில் கரைக்கப்பட்டன.

பாதுகாப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தூத்துக்குடியில், தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story