மக்கும்-மக்காத குப்பை பிரித்து வழங்க பொதுமக்களுக்கு கூடைகள் வழங்கும் நிகழ்ச்சி
திருவண்ணாமலை நகராட்சியில் மக்கும்-மக்காத குப்பை பிரித்து வழங்க பொதுமக்களுக்கு கூடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட துர்க்கை அம்மன் கோவில் தெருவில் நகராட்சி நிர்வாகமும், தூய்மை அருணையும் இணைந்து மக்கும் குப்பை-மக்காத குப்பை பிரித்து வழங்க பொதுமக்களுக்கு கூடைகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மால்முருகன், ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு மக்கும் குப்பை-மக்காத குப்பை பிரித்து வழங்க கூடைகளை வழங்கி பேசுகையில், 'இனிவரும் காலங்களில் ஒவ்வொரு வீடுகளிலும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை இருகூடைகளில் பிரித்து வழங்க வேண்டும். திருவண்ணாமலை நகரம் தூய்மையான நகரமாக மாறிவருகிறது' என்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் கலந்துகொண்டு சிறப்பாக செயல்படும் நகராட்சி ஊழியர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் நகராட்சி பணியாளர்கள், தூய்மை அருணை காவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.