புள்ளிமான் சரணாலயத்தில் சேதமடைந்த சுற்றுச்சுவரை சரிசெய்ய திட்ட மதிப்பீடு தயார்-வன அதிகாரி தகவல்


புள்ளிமான் சரணாலயத்தில் சேதமடைந்த சுற்றுச்சுவரை சரிசெய்ய திட்ட மதிப்பீடு தயார்-வன அதிகாரி தகவல்
x

கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயத்தில் சேதமடைந்த சுற்றுச்சுவரை சரிசெய்ய திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி

கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயத்தில் சேதமடைந்த சுற்றுச்சுவரை சரிசெய்ய திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரினக்காப்பாளர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-

புள்ளிமான் சரணாலயம்

கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயம் 288.40 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்து உள்ளது. இதன் சுற்றளவு 7.60 கிலோ மீட்டர். நெல்லை வனத்துறை சார்பாக கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயத்திற்கும் அதில் வசிக்கும் புள்ளிமான்களுக்கும் பல்வேறு திட்டப்பணிகள் செய்தும், செய்யப்பட்டும் வருகிறது.

1.கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயத்திற்கு தினமும் சிப்காட் மூலம் வழங்கப்படும் தண்ணீர் வேட்டை தடுப்பு காவலர்கள் மூலம் சரணாலயத்தில் உள்ள 8 தண்ணீர் தொட்டிகளில் மான்கள் குடிப்பதற்காக நிரப்பப்படுகிறது.

2.சரணாலய கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் டிராக்டர் மூலம் ஆங்காங்கே உள்ள தொட்டிகளில் நிரப்பப்படுகிறது.

3.சரணாலயத்தில் 4 இடங்களில் தண்ணீர் தெளிப்பான் வசதியுடன் தீவனப்புல் வளர்க்கப்பட்டு மான்களின் உணவு தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

4. கங்கைகொண்டான் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் உள்ள மான்கள் சாலையில் அடிப்பட்டு காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மான்களுக்கு சிகிச்சை அளித்து பராமரிப்பதற்காக சரணாலயத்திற்கு உள்ளேயே மான்கள் மீட்பு கூடம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு காயம் அடைந்த மான்களுக்கு நெல்லை வனக்கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

5. 2022- 2023-ம் ஆண்டில் ரூ.6.40 லட்சம் செலவில் சோலார் மின் வசதியுடன் கூடிய போர்வெல் மற்றும் குடிநீர் தொட்டி கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

திட்ட மதிப்பீடு தயார்

6.சரணாலயத்தில் கண்காணிப்பு பணிக்காக 2 பார்வை கோபுரங்கள் உள்ளன. பாதுகாப்பு பணியில் தினமும் காலை மற்றும் இரவில் 2 வேட்டை தடுப்புகாவலர்கள் வீதம் சுழற்சி முறையில் பணியில் உள்ளனர். அவர்கள் சரணாலயத்தை சுற்றியுள்ள கிராமங்கள், தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலும் இரவு ரோந்து பணிகள் மேற்கொள்வார்கள்.

7. கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயத்தில் சேதமடைந்த சுற்றுச்சுவர் பகுதிகளை சீமைக்கருவேலம் மரங்கள் கொண்டும், கம்பி வேலி அமைத்தும் அடைப்பு சரிசெய்யப்பட்டு உள்ளது. சேதமடைந்த சுற்றுச்சுவர் முழுவதையும் சரிசெய்வதற்கான மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்ற உடன் பணிகள் மேற்கொள்ளப்படும்.

8. மான்கள் சாலையை கடக்கும் பகுதியில் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பதாகைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

9. சரணாலயத்தை சுற்றியுள்ள கிராமங்களில் தன்னார்வ உறுப்பினர்கள் மூலம் மான்கள் நடமாட்டம் குறித்து தகவல் பெறப்பட்டு வருகிறருது.

10. சரணாலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கிராம மக்கள், பள்ளி மாணவர்களுக்கு மான்கள் குறித்து அவ்வபோது விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story