திட்ட மதிப்பீடு தயார் செய்ய வேண்டும்
நீலகிரியில் 3 சட்டமன்ற தொகுதிகளில் தலா 10 கோரிக்கைகளை செயல்படுத்த, கள ஆய்வு மேற்கொண்டு திட்ட மதிப்பீடு தயார் செய்ய வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
ஊட்டி,
நீலகிரியில் 3 சட்டமன்ற தொகுதிகளில் தலா 10 கோரிக்கைகளை செயல்படுத்த, கள ஆய்வு மேற்கொண்டு திட்ட மதிப்பீடு தயார் செய்ய வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
ஆலோசனை கூட்டம்
நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர்போஸ்டில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளில் தலா 10 முக்கியமான கோரிக்கைகளை செயல்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், ஊட்டி எம்.எல்.ஏ. கணேஷ், கூடலூர் எம்.எல்.ஏ. பொன் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பேசும்போது கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் தலா 10 கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார். அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் தலா 10 முக்கியமான கோரிக்கைகள் அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கள ஆய்வு
இதனை செயல்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து முதல் கட்டமாக துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கோரிக்கைகளை செயல்படுத்துவற்காக சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு, செயல்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் உள்ளனவா என்பது குறித்தும், அத்திட்டம் செயல்படுத்துவதற்கான தோராயமான செலவு மதிப்பீடு ஆகியவற்றினை தயார் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷன், மாவட்ட வன அலுவலர் சச்சின் போஸ்லே துக்காராம், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.