கண்காணிப்பு கேமரா பொருத்த காலஅவகாசம் வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்


கண்காணிப்பு கேமரா பொருத்த காலஅவகாசம் வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் தனியார் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த காலஅவகாசம் வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

நீலகிரி

ஊட்டி,

தமிழகத்தில் தனியார் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த காலஅவகாசம் வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

கண்காணிப்பு கேமராக்கள்

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளின் சங்க கூட்டம் ஊட்டியில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ரவிகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மருத்துவ படிப்புக்கு தேர்வான இருளர் இன மாணவி ஸ்ரீமதிக்கு, மெட்ரிக் பள்ளிகளின் மாவட்ட கல்வி அதிகாரி பார்த்தசாரதி கேடயம் வழங்கினார். இதைதொடர்ந்து மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 57 ஆயிரம் பள்ளி வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களுக்கு பின்பகுதியில் நாளை மறுநாளுக்குள் (செவ்வாய்க்கிழமை) கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் தகுதி சான்று ரத்து செய்யப்படும் என்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஒரு மாதம் கால அவகாசம் கேட்டு உள்ளோம்.

போராட்டம்

காலஅவகாசம் வழங்காவிட்டால் வருகிற நாளை மறுநாள் சென்னையில் போராட்டம் நடத்தப்படும். கள்ளக்குறிச்சியில் தனியார் மெட்ரிக் பள்ளியில் 3,500 மாணவர்கள், சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 500 பேர் படித்து வந்தனர். மாணவி தற்கொலையை காரணம் காட்டி, பள்ளி சேதப்படுத்தப்பட்டது. அங்கு நடந்த கலவரத்தில் பலர் கைது செய்யப்பட்டனர்.

கோர்ட்டு அறிவுறுத்தலின்படி, பள்ளி முழுமையாக சீரமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், பள்ளியை திறக்க அனுமதிக்க வில்லை. இதனால் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். இதனால் வருகிற 16-ந் தேதிக்குள் தனியார் மெட்ரிக் பள்ளியை திறக்க அனுமதிக்காவிட்டால், பள்ளி மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், ஊழியர்கள் என 10 ஆயிரம் பேர் பள்ளியை திறக்க அனுமதி வழங்க கோரி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும். நீலகிரியில் அனைத்து தனியார் பள்ளிகளின் ஒத்துழைப்புடன் நீட் தேர்வு பயிற்சி மையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில பொருளாளர் நடராஜன் உடனிருந்தார்.



Next Story