விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்
திருமருகல் அருகே வடிகால் வாய்க்கால்களை சீர்செய்து தரக்கோரி விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டச்சேரி:
திருமருகல் அருகே வடிகால் வாய்க்கால்களை சீர்செய்து தரக்கோரி விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடிகால் வாய்க்கால்கள்
திருமருகல் ஒன்றியம் பனங்குடியில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் (சி.பி.சி.எல்.) நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக ரூ.31 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பனங்குடியை சுற்றி உள்ள ஆயிரத்து 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பனங்குடி மற்றும் நரிமணம் ஆகிய கிராமத்தை சுற்றியுள்ள பாசன வாய்க்கால்களை சி.பி.சி.எல். நிறுவனம் பொக்லின் எந்திரம் கொண்டு மணல் அடித்து அடைத்துள்ளனர். இதனால் பனங்குடி, சன்னமங்கலம், வெள்ளப்பாக்கம் உள்ளிட்ட பாசன வடிகால் வாய்க்கால்கள் வழியாக காவிரியில் இருந்து செல்லும் நீர் செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அரை நிர்வாணமாக..
கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டும் இதுநாள் வரை பாசனத்திற்கு தண்ணீர் வாராததை கண்டு அதிர்ச்சி அடைந்த பனங்குடி விவசாயிகள் சி.பி.சி.எல். நிறுவனத்திடம் வாய்க்கால்களை சீர் செய்து தரும்படி கூறினர். ஆனாலும் வாய்க்கால்களை சீர் செய்து தரவில்லை என்று தெரிகிறது.
இதனால் சி.பி.சி.எல். நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட பொருளாளர் சக்திவேல் தலைமையில் விவசாயிகள் பனங்குடியில் தங்களது வயலில் இறங்கி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாய்க்கால்களை மண் கொண்டு அடைத்த சி.பி.சி.எல். அதிகாரிகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.