மேய்ச்சலுக்கு சென்ற ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு
ஆம்பூர் அருகே மேய்ச்சலுக்கு சென்ற ஆட்டை, மலைப்பாம்பு உயிருடன் விழுங்கியது.
ஆம்பூர் அருகே மேய்ச்சலுக்கு சென்ற ஆட்டை, மலைப்பாம்பு உயிருடன் விழுங்கியது.
ஆடு மேய்த்தனர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பைரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் உமா (வயது 48). இவர் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று தனது ஆடுகளை அருகில் உள்ள வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். மேலும் இவருடன் அதே பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களது ஆடு, மாடுகளை ஓட்டிச் சென்றனர்.
ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தபோது சுமார் 10 அடி நீளம் உள்ள மலைப் பாம்பு ஒன்று அங்கு ஊர்ந்து வந்தது. இந்த பாம்பை கண்ட உமா மற்றும் உடன் வந்த சிறுவர் அங்கிருந்து ஓடினர். மலைப் பாம்பு அருகில் மேய்ந்துகொண்டிருந்த உமாவுக்கு சொந்தமான ஒரு ஆட்டை பிடித்தது.
ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு
பாம்பிடம் இருந்து தப்பிக்க ஆடு சிறிது நேரம் போராடியது. ஆனால் தப்பிக்க முடியவில்லை. முழுமையாக ஆட்டை சுற்றிக் கொண்ட பாம்பு சில மணி நேரத்தில் ஆட்டை முழுமையாக விழுங்கி விட்டது.
இதனால் அங்கிருந்து உமா மற்றும் சிறுவர்கள் மற்ற ஆடுகளை ஓட்டிக்கொண்டு வீடு திரும்பினர். சிறுவர்கள் சிலர் ஆட்டை மலைப்பாம்பு விழுங்கியதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோ இப்பொழுது வைரலாக பரவி வருகிறது.