கருவேப்பிலங்குறிச்சியில் வெறிநாய் கடித்து 30 பேர் காயம்


கருவேப்பிலங்குறிச்சியில்    வெறிநாய் கடித்து 30 பேர் காயம்
x

கருவேப்பிலங்குறிச்சியில் வெறிநாய் கடித்து 30 பேர் காயமடைந்தனர்.

கடலூர்


விருத்தாசலம்,

கருவேப்பிலங்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக சிலர் காத்திருந்தனர். அப்போது புதரில் இருந்து ஓடி வந்த வெறிநாய் ஒன்று, பஸ்சுக்காக காத்திருந்தவர்களை கடித்தது. இதனால் அவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். இருப்பினும் அவர்களை துரத்துச்சென்று வெறிநாய் கடித்தது. இதில் பேரளையூர் தெற்கு தெருவை சேர்ந்த பிச்சப்பிள்ளை, வடக்கு தெரு சாமிகண்ணு(வயது 70), டி.வி. புத்தூர் கொளஞ்சி மனைவி அசலாம்பால்(70), கருவேப்பிலங்குறிச்சி அறிவுகண்ணன் மகன் சஞ்சய்(9), கார்மாங்குடி சிவசுப்பிரமணியன் மகன் நிகாஷ் (14) ஆகியோர் காயமடைந்தனர்.

30 பேர் காயம்

மேலும் தெருத்தெருவாக ஓடிய அந்த வெறிநாய் வீட்டின் முன்பு படுத்திருந்தவர்கள், சுத்தம் செய்து கொண்டிருந்தவர்களையும் கடித்து குதறியது. அந்தவகையில் பேரளையூர் வடக்கு தெருவில் வீட்டில் படுத்திருந்த கோவிந்தராஜன் மனைவி பொன்னாச்சி(65), வீட்டின் முன்பு தூய்மைப்பணியில் ஈடுபட்ட ரவி மனைவி அலமேலு (40), நல்லப்பன் மகன் ராஜேந்திரன் (59), சுதர்சன் மகன் செந்தில், கருவேப்பிலங்குறிச்சி சீனு, தங்கராசு மகன் மேகராஜன்(55), கந்தசாமி மகன் சீனிவாசன்(53) உள்ளிட்டோரையும் தெரு நாய் கடித்தது. இதில் மொத்தம் 30 பேர் காயடைந்தனர். இவர்கள் கருவேப்பிலங்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர்.

கிராம மக்கள் அச்சம்

இதனிடையே கிராம மக்கள் ஒன்று திரண்டு விரட்டியதால், அந்த வெறிநாய் தப்பி ஓடிவிட்டது. இருப்பினும் மீண்டும் தெருநாய் கிராமத்திற்குள் புகுந்து கடித்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

இதனால் கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். கிராம மக்களை கடித்த தெருநாயை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story