விக்கிரவாண்டி அருகே பரபரப்புலாரி மோதி முறிந்து விழுந்த ரெயில்வே கேட்மின்கம்பி மீது விழுந்ததால் 2 ரெயில்கள் தாமதம்
விக்கிரவாண்டி அருகே டிப்பர் லாரி மோதி முறிந்து விழுந்த ரெயில்வே கேட், உயர் அழுத்த மின்கம்பி மீது விழுந்தது. இதனால் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ½ மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.
விக்கிரவாண்டி,
டிப்பர் லாரி மோதல்
விழுப்புரம் சாலமேடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 36). டிரைவர். இவர் தற்போது விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழி சாலை விரிவாக்கப் பணிக்கு ஜல்லி கற்கள் லோடு ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அதன்படி நேற்று காலை 9.30 மணியளவில் மதகடிப்பட்டில் இருந்து முண்டியம்பாக்கம் வழியாக உலகலாம்பூண்டிக்கு டிப்பர் லாரியை சுரேஷ் ஓட்டிச் சென்றார்.
அப்போது அந்த லாரி முண்டியம்பாக்கம் ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற போது, எதிர்பாராதவிதமாக ரெயில்வே கேட் மீது லாரி மோதியது. மேலும் மோதிய வேகத்தில் ரெயில்வே கேட் மேலே சென்ற உயர்அழுத்த மின் கம்பி மீது சாய்ந்தது.
பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த விக்கிரவாண்டி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரராஜா, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் அரிவிநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், உயர் அழுத்த மின்கம்பி மீது ரெயில்வே கேட் விழுந்து கிடந்ததால் அப்பகுதியில் மின்சாரம் பாய்ந்து உயிர் இழப்பு ஏற்பட கூடும் என்பதை அறிந்த போலீசார், ரெயில்வே கேட்டை யாரும் கடக்க முடியாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து துண்டிப்பு
இதற்கிடையே இது பற்றி தகவல் அறிந்த விழுப்புரம் ரெயில்வே மின்துறை முதுநிலை பொறியாளர் அஜய் தலைமையிலான ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் ரெயில்வே கேட் பகுதியில் செல்லும் உயர்மின் அழுத்த கம்பியின் மின்சாரத்தை துண்டித்தனர்.
அதன்பிறகு விபத்துக்குள்ளான டிப்பர் லாரி மற்றும் அதன் டிரைவரையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் சேதமடைந்த ரெயில்வே கேட் சீரமைக்கப்பட்டு, போக்குவரத்து தொடங்கியது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
ரெயில்கள் தாமதம்
மேலும் இந்த விபத்து காரணாமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் விழுப்புரத்தில் நிறுத்தப்பட்டு சுமார் ½ மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன. உரிய நேரத்தில் ரெயில்வே கேட் ஊழியர் மற்றும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.