இரவிபுத்தன்துறை அருகே மீனவர்கள் விரித்த வலையில் சிக்கிய அரிய வகை உடும்பு சுறா
இரவிபுத்தன்துறை அருகே மீனவர்கள் விரித்த வலையில் அரிய வகை உடும்பு சுறா சிக்கியது. அதை மீண்டும் மீனவர்கள் கடலுக்குள் விட்டனர்.
கொல்லங்கோடு:
இரவிபுத்தன்துறை அருகே மீனவர்கள் விரித்த வலையில் அரிய வகை உடும்பு சுறா சிக்கியது. அதை மீண்டும் மீனவர்கள் கடலுக்குள் விட்டனர்.
அரிய வகை உடும்பு சுறா
இரவிபுத்தன்துறை அருகே எடப்பாடு பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான மீனவர்கள் தினமும் கரைமடி வலை மூலம் மீன்பிடித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல் மீனவர்கள் கரைமடி வலையில் மீன்பிடிக்க சென்று ஆழ்கடல் பகுதியில் வலையை விரித்து விட்டு கரைபகுதியில் நின்று வலையை இழுத்துள்ளனர். ஆனால் வலை வழக்கமாக வருவது போல் இல்லாமல் மிகுந்த சிரமமாக இருந்துள்ளது. இதனையடுத்து அதிகமான பொதுமக்கள் உதவியுடன் மீனவர்கள் வலையை இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர்.
கடலுக்குள் விட்டனர்
அப்போது அந்த வலையினுள் ராட்சத அரியவகை உடும்பு சுறா மீன் ஒன்று சிக்கியிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த மீனவர்கள் அவசர அவசரமாக வலையை கிழித்து சுறாவை வெளியேற்றினர். இதையடுத்து கடல் அலையில் சிக்கி கடலுக்குள் செல்ல முடியாமல் திணறிய சுறாமீன் பலமணி நேர போராட்டத்திற்கு பிறகு கடலுக்குள் சென்றது.
அதை தொடர்ந்து மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான வலை சேதமடைந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.