தடுப்பணை கட்ட வேண்டுகோள்
கொள்ளிடம் ஆற்றில் அளக்குடி- திருக்கழிப்பாலை கிராமங்களுக்கு இடையே தடுப்பணை கட்டப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆறு ஏராளமான விளை நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கிறது. இதன் மூலம் அணைக்கரையில் இருந்து காட்டூர் வரை கொள்ளிடம் ஆறு சென்று வங்க கடலில் கலக்கிறது. பல்வேறு பகுதிகளில் ஏற்படும் வெள்ளநீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுவதால் தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர், மாவட்டகளை சேர்ந்த விவசாயிகள் பயனடைந்து வருகின்றனா். கொள்ளிடம் ஆற்றின் இரு கரைகளிலும் அதிக அளவில் தேக்கு மரங்கள், உள்ளன.
இந்த காடுகளில் மயில், மான், மற்றும் பல்வேறு பறவைகள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் வனத்துறை மூலம் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள காடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.. கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு மணல் குவியல் இருப்பதால் அரசு சார்பில் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றது.
விவசாயம்
கொள்ளிடம் ஆற்றின் கரையோர படுகை பகுதிகளில் விவசாயிகள் பல்வேறு பூச்செடிகள் மற்றும் தோட்டப்பயிர்கள், பணப்பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் பழையார் கடலில் இருந்து மாதிரவேளூர் வரை 15 கிலோமீட்டர் தூரம் கோடை காலத்தில் கடலிலிருந்து உப்பு நீர் வந்து செல்கின்றது.இதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொள்ளிடம் ஒன்றிய பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் விவசாயம் செய்ய முடியாமல் காவிரி நீரையும் மழை நீரையும் நம்பி விவசாயம் செய்யும் சூழல் நிலவுகிறது.
தடுப்பணை
கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என மயிலாடுதுறை, கடலூர் மாவட்ட விவசாயிகள் கடந்த 12 ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்பொழுது கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டு ஏற்படும் வெள்ளப்பெருக்கால் கொள்ளிடம் ஆற்றில் இரு கரை பகுதிகளிலும் மண்ணரிப்பு ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. எனவே கொள்ளிடம் ஆற்றின் கடைமடை பகுதிகளில் விவசாயிகள் கோடை நாட்களில் உப்புநீராலும், மழைக்காலங்களில் வெள்ள நீராலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண கொள்ளிடம் ஆற்றில் அளக்குடி- திருக்கழிப்பாலை கிராமங்களுக்கு இடையே தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.