பேய்க்குளம் பகுதியில் கருகும் பயிர்களை பாதுகாக்க வடகாலில் தண்ணீர் திறக்க கலெக்டரிடம் கோரிக்கை


தூத்துக்குடி அருகே பேய்க்குளம் பகுதியில் கருகும் பயிர்களை பாதுகாக்க வடகாலில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து உள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே பேய்க்குளம் பகுதியில் கருகும் பயிர்களை பாதுகாக்க வடகாலில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து உள்ளனர்.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.

சேர்வைக்காரன் மடம் கிராம விவசாயிகள் அபிவிருத்தி சங்கத்தினர் கலெக்டர் செந்தில்ராஜிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனத்தில் அமைந்து உள்ள பேய்க்குளம் பகுதியில் பயிரை காப்பாற்ற தண்ணீர் கேட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஒரு வாரத்துக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை பேய்க்குளம் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் எங்கள் பகுதியில் உள்ள பயிர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. ஆகையால் தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்ட இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தினர், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் நேற்று கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் ஆட்டோ ஸ்டாண்டுகள் பல்வேறு இடங்களில் உரிய அனுமதியோடு இயங்கி வருகிறது. ஆனால் எங்கள் சங்கமான இந்து ஆட்டோ முன்னணி தொழிலாளர் சங்கத்தின் போர்டை வைக்க அனுமதி மறுக்கப்படுகிறது. ஆகையால் இந்து ஆட்டோ முன்னணி தொழிலாளர் சங்க போர்டு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் எங்கள் ரேஷன்கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றை அரசிடம் திரும்ப ஒப்படைக்கும் நிலை ஏற்படும் என்று கூறி உள்ளனர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் தங்களை அவமதித்ததாக கூறி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் இந்து ஆட்டோ முன்னணி மாநில துணை பொதுச் செயலாளர் பி.சக்திவேல், இந்து முன்னணி மாநகர் மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார், மாவட்ட அமைப்பாளர் நாராயண் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி சிவபாரத இந்து மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் மாவட்ட கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், தூத்துக்குடி புதூர்பாண்டியாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கூடம் விதிமுறை மீறி கட்டப்பட்டு உள்ளது. அந்த பள்ளிக்கூடம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தார். தொடர்ந்து வெளியில் வந்த பாலசுப்பிரமணியன், தனது மேலாடையை கழற்றி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, மாவட்ட கலெக்டர் தான் கொடுத்த மனுவை வீசி எறிந்ததாக புகார் தெரிவித்து, அரை நிர்வாணமாக போராட்டம் நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி மற்றும் போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

காங்கிரஸ் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் மச்சேந்திரன் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை-சாயர்புர் தேரி ரோடு போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக மாறி உள்ளது. இந்த சாலையை விரிவு படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

தூத்துக்குடி ஜவான்கள் அமைப்பினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் உள்ளனர். கடந்த காலங்களில் தமிழக அரசு போலீஸ் தேர்வில் துணை ராணுவத்தினருக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்து இருந்தது. அதனை தற்போது ரத்து செய்து விட்டது. இதனால் முன்னாள் ராணுவத்தினர் பாதிக்கப்பட்டு உள்ளோம். மீண்டும் எங்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

அடிப்படை வசதி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில் கட்சியினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் செந்தில்ராஜிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், கருங்குளம் யூனியன் தெற்கு காரசேரி பஞ்சாயத்து கிளாக்குளம் குருக்கள் கோட்டை பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட பழைய கிளாக்குளம் என்ற குளம் உள்ளது. இந்த குளம் 50 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. சமுதாய நலக்கூடம், கிராமப்புற பொதுநூலகம், குழந்தைகளுக்கான அங்கன்வாடி பள்ளி, சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா, இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானம், பொது சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும், அந்த பகுதி மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.


Next Story