ஈரோடு மாநகராட்சியில் குப்பை வரியை நீக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்; அனைத்து கவுன்சிலர்களும் கோரிக்கை மனு கொடுத்தனர்


ஈரோடு மாநகராட்சியில் குப்பை வரியை நீக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்; அனைத்து கவுன்சிலர்களும் கோரிக்கை மனு கொடுத்தனர்
x

ஈரோடு மாநகராட்சியில் குப்பை வரியை நீக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அனைத்து கவுன்சிலர்களும் கையொப்பமிட்டு கோரிக்கை மனு வழங்கினார்கள்.

ஈரோடு

ஈரோடு மாநகராட்சியில் குப்பை வரியை நீக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அனைத்து கவுன்சிலர்களும் கையொப்பமிட்டு கோரிக்கை மனு வழங்கினார்கள்.

கவுன்சிலர்கள் கோரிக்கை

ஈரோடு மாநகராட்சியில் வீட்டு வரி, கட்டிட வரியுடன் குப்பை வரியும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த தொகை அதிகமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுவதுடன், குப்பை வரியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

இதுதொடர்பாக ஈரோடு மாநகராட்சி மன்ற கூட்டங்களில் கவுன்சிலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று நடந்த கூட்டத்தின் போது, தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் கையொப்பமிட்டு மண்டலம் வாரியாக 4 கோரிக்கை மனுக்களை மேயர் சு.நாகரத்தினம், துணை மேயர் வி.செல்வராஜ் ஆகியோரிடம் வழங்கினார்கள்.

குப்பை வரி

அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2017-2018-ம் ஆண்டு ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு குப்பை வரி விதிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாநகராட்சியாக சென்னை மாநகராட்சியில் கூட குப்பைக்கு என்று தனியாக வரி விதிக்கப்படவில்லை.

எனவே 2021 சட்டமன்ற பொதுத்தேர்தல் பிரசாரத்தில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஈரோடு மாநகராட்சி பகுதியில் வீடு மற்றும் கடைகளுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் விதிக்கப்பட்ட குப்பை வரியை நீக்குவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தோம்.

தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

அதன்படி ஈரோடு மாநகராட்சிபகுதியில் குப்பை வரியை நீக்க வேண்டும் என்று மாமன்ற கவுன்சிலர்கள் சார்பாக தீர்மானம் கொண்டு வந்திருக்கிறோம். இந்த தீர்மானத்தை உடனடியாக பதிவு செய்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக கவுன்சிலர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதில் அளித்த ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் பேசும்போது, "குப்பை வரி வசூல் என்பது அரசின் முடிவாகும். எனவே இந்த தீர்மானம் குறித்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும். அரசின் முடிவுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தற்போது வசூலிக்கப்படும் குப்பை வரியை வைத்து தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க முடிகிறது" என்றார்.

மேலும், அவர் பேசும்போது, 'மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் வீடுகளின் குழாய் இணைக்க ஒப்பந்ததாரருக்கு மாநகராட்சி நிர்வாகம் நிதி ஒதுக்கி உள்ளது. எனவே பொதுமக்கள் தனியாக பணம் கொடுக்க வேண்டாம்' என்றும் கூறினார்.


Next Story