கவர்னரை கண்டித்து குடியாத்தம் நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம்


கவர்னரை கண்டித்து குடியாத்தம் நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம்
x

செந்தில்பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கிய கவர்னரை கண்டித்து குடியாத்தம் நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேலூர்

நகர மன்ற கூட்டம்

குடியாத்தம் நகராட்சி கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, பொறியாளர் பி.சிசில்தாமஸ், மேலாளர் சுகந்தி, வருவாய் ஆய்வாளர் தீனதயாளன், தூய்மை பணி ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் குப்பைகள் சரிவர அகற்றுவதில்லை, ஒரு வார்டுக்கு எத்தனை தனியார் தூய்மை பணியாளர்கள் உள்ளனர். அவர்களது பெயர்களை அந்தந்த பகுதி நகரமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தூர்வார நடவடிக்கை

தொடர்ந்து தியாகி அண்ணல் தங்கோவுக்கு ரூ.50 லட்சத்தில் சிலை வைக்க அறிவித்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், சந்தப்பேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றியதற்கு தமிழக அரசுக்கும் உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் குடியாத்தம் நகராட்சி பகுதியில் உள்ள கால்வாய்களை மழைக்காலங்களை கருத்தில் கொண்டு உடனடியாக தூர் வாரி, அந்த மண்ணை உடனடியாக அகற்ற வேண்டும் என தெரிவித்தனர்.

உறுப்பினர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளுக்கு பதிலளித்த நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் ஒவ்வொரு வார்டிலும் எத்தனை தூய்மை பணியாளர்கள் உள்ளனர் என்பது குறித்து பெயர் விவரங்கள் உடனடியாக உறுப்பினர்களுக்கு தெரிவிக்கபடும். கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கவர்னரை கண்டித்து தீர்மானம்

தரணம்பேட்டை பகுதியில் உள்ள ஆலியார் தெருவிற்கு கண்ணியமிக்க காயிதே மில்லத் பெயர் வைக்க வேண்டும் என உறுப்பினர்கள் ஆஜீராசலீம், முஷிராஇர்பான், அன்வர்பாஷா, ஜாவித்அகமது உள்ளிட்டோர் கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து தரணம்பேட்டை ஆலியார் தெருவை கண்ணியமிக்க காயிதேமில்லத் தெரு என மாற்றம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு அப்பகுதி நகரமன்ற உறுப்பினர்கள் தலைவருக்கு நன்றி தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்ட தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்தும், கவர்னரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் எனவும் நகரமன்ற தலைவர், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்து ஒரு மனதாக நிறைவேற்றினர். பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.


Next Story