கிராமசபை கூட்டங்களில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்


கிராமசபை கூட்டங்களில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்
x

ஏகனாபுரம், நெல்வாய் கிராமசபை கூட்டங்களில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 4-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வளத்தூர், நெல்வாய், தண்டலம், மேல்படவூர், நாகப்பட்டு, ஏகனாபுரம், எடையார்பாக்கம், அக்கம்மாபுரம், குணகரம்பாக்கம், சிங்கிலி பாடி, மகாதேவி மங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி 4 ஆயிரத்து 750 ஏக்கர் பரப்பளவில் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம், பரந்தூர், தண்டலம், நெல்வாய், மேலேறி, உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்

குடியிருப்புகளையும் வாழ்வாதாரங்களையும் இழக்கும் கிராம மக்கள் கிராம சபை கூட்டங்களில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஆகஸ்டு 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, நவம்பர் 1 உள்ளாட்சி தினம், உள்ளிட்ட 3 கிராம சபை கூட்டங்களிலும், விளைநிலங்களையும் குடியிருப்புகளையும் இழக்கும் கிராமமான ஏகனாபுரம் கிராம மக்கள் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நெல்வாய், ஏகனாபுரம் கிராமங்களில் 3-முறை தீர்மானங்களை நிறைவேற்றி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.

4-வது முறையாக

இந்த நிலையில் நேற்று குடியரசு தினத்தையொட்டி 144-தண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட நெல்வாய் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார் தலைமையிலும், ஏகனாபுரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி சரவணன் தலைமையில் ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் ஜெயகாந்தன் முன்னிலையிலும் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் கிராம மக்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய, மாநில அரசுகள் திட்டத்தை கைவிட வேண்டும், என கோரிக்கை விடுத்து கிராமசபை கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானத்தை 4-வது முறையாக நிறைவேற்றி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Next Story