மழையில் கரைந்து வரும் தடுப்பு சுவர்


மழையில் கரைந்து வரும் தடுப்பு சுவர்
x
தினத்தந்தி 28 July 2023 6:45 PM GMT (Updated: 28 July 2023 6:46 PM GMT)

புதுப்பேட்டை அருகே மழையில் கரைந்து வரும் தடுப்பு சுவரை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்

கடலூர்

புதுப்பேட்டை

சாலையோர தடுப்பு சுவர்

பண்ருட்டி ஒன்றியத்துக்குட்பட்ட மணம் தவிழ்ந்தபுத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பொன்னங்குப்பம் கிராமத்தில் சாலையோரம் குளம் உள்ளது. சாலையில் மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் குளத்தின் கரையை ஒட்டியுள்ள சாலையோரம் சுமார் 100 அடி தூரத்துக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ஒன்றிய கவுன்சிலர் பொது நிதியிலிருந்து தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது.

ஆனால் மழையில் தடுப்பு சுவர் கரைந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் ஒரு கட்டத்தில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து மண் அரிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுப்பு சுவரை பார்வையிட்டு சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அரசு பணம் வீணாகிறது

இது குறித்து பொன்னங்குப்பம் கிராமமக்கள் கூறும்போது, மண்அரிப்பை தடுப்பதற்காகத்தான் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. அதை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். ஆனால் தரமற்ற முறையில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளதால் மழை பெய்யும் போதெல்லாம் தடுப்பு சுவர் கரைந்து படிப்படியாக இடிந்து வருகிறது. மக்கள் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட தடுப்பு சுவர் பயனற்று போவதால் இதற்காக செலவழித்த அரசு பணம் வீணாக விரயமாவதை நினைக்கும்போது மன வேதனையாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதம் அடைந்த தடுப்பு சுவரை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story