கிரீன்சர்க்கிளை உடைத்து போடப்பட்ட சாலை அடைப்பு


கிரீன்சர்க்கிளை உடைத்து போடப்பட்ட சாலை அடைப்பு
x

வேலூரில் கிரீன்சர்க்கிளை உடைத்து போடப்பட்ட சாலை அடைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

வேலூர்

போக்குவரத்து நெரிசல்

வேலூர் கிரீன்சர்க்கிள் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெரிசலை தடுப்பதற்காக கடந்த செப்டம்பர் மாதம் வேலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. கிரீன் சர்க்கிளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக சென்னை மார்க்கமாக வேலூருக்கு வரும் பஸ்கள் கலெக்டர் அலுவலகம்- கிரீன்சர்க்கிள் இடைப்பட்ட பகுதியில் சர்வீஸ் சாலையில் திரும்புவதற்கு பதிலாக தடுப்புகள் அமைத்து வாகனங்கள் நேராக அனுப்பி வைக்கப்பட்டன.

இதேபோல் வேலூரில் இருந்து காட்பாடி செல்லும் வாகனங்கள் நேஷனல் தியேட்டர் அருகே இருந்து கிரீன் சர்க்கிள் செல்லும் சாலையில் தடுப்புகளை அமைத்து பெட்ரோல் பங்க் அருகே சென்று சர்வீஸ் சாலை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

சாலை அமைப்பு

கிரீன்சர்க்கிள் அகலம் அதிகமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கிரீன் சர்க்கிள் வரும் வாகனங்கள் மீண்டும் கலெக்டர் அலுவலகத்துக்கு செல்லும் வகையில் கிரீன் சர்க்கிள் ஒரு பகுதி உடைக்கப்பட்டு அதில் சாலை உருவாக்கப்பட்டது. அதன் வழியாக வாகனங்கள் சென்று வந்தன.

இந்த நிலையில் தற்போது அந்தப் பாதையில் தடுப்புகளை வைத்து போலீசார் அடைத்துள்ளனர். கிரீன் சர்கிளை உடைத்து போடப்பட்ட சாலை மூடப்பட்டுள்ளதால் அந்தப் பகுதி வழியாக சென்று வந்த வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

விபத்தை தடுக்க..

இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது:-

போக்குவரத்து நெரிசலை குறைக்க கிரீன்சர்க்கிள் பகுதி குறைக்கப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வருபவர்கள் கிரீன்சர்க்கிளை சுற்றி செல்லாமல் இருப்பதற்கு கிரீன்சர்க்கிளில் சிறிய சாலை அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் கிரீன் சர்க்கிளில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சர்வீஸ் சாலையில் சிலர் எதிர்திசையில் பயணம் செய்து கிரீன்சர்கிள் அளவு குறைக்கப்பட்டு அமைக்கப்பட்ட சாலைக்கு வருகின்றனர். அப்போது கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கிரீன் சர்க்கிள் வரும் வாகனங்கள் அந்த சிறிய சாலையின் வழியாக செல்லும்போது விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க அந்த பாதை மூடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொதுமக்கள் கூறுகையில், விபத்து ஏற்படுவதாக சாலையை அடைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எதிர்திசையில் வரும் வாகனங்களை போலீசார் தடுக்க வேண்டும். அதேவேளையில் சாலையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றனர்.


Next Story