வெள்ளி வியாபாரியிடம் வழிப்பறி
கந்தம்பட்டியில் வெள்ளி வியாபாரியின் முகத்தில் மிளகாய் பொடி தூவி வெள்ளிப்பொருட்களை வழிப்பறி செய்ய முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சூரமங்கலம்
கந்தம்பட்டியில் வெள்ளி வியாபாரியின் முகத்தில் மிளகாய் பொடி தூவி வெள்ளிப்பொருட்களை வழிப்பறி செய்ய முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வெள்ளி வியாபாரி
சேலம் மெய்யனூரை சேர்ந்தவர் கணேச சங்கரன் (வயது 57), வெள்ளி வியாபாரி. இவர் பனங்காடு பகுதியில் வெள்ளி வேலை செய்து வரும் ஒருவரிடம் வெள்ளிக்கட்டியை கொடுத்து வெள்ளி பொருட்கள் செய்ய கொடுத்திருந்தார்.
பின்னர் கடந்த 3-ந் தேதி மோட்டார் சைக்கிளில் பனங்காட்டுக்கு சென்று வெள்ளிப்பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். கந்தம்பட்டி அருகே அவருடைய மோட்டார் சைக்கிளை 2 பேர் திடீரென வழிமறித்தனர்.
மிளகாய் பொடி தூவி...
அவர்கள் கணேச சங்கரனின் முகத்தில் மிளகாய் பொடி தூவி மோட்டார் சைக்கிளில் இருந்த வெள்ளிப்பொருட்களை திருட முயன்றனர். அப்போது கணேச சங்கரன், திருடன், திருடன் என கூச்சல் போட்டார். இதையடுத்து அங்கு வந்த பொதுமக்கள் வெள்ளி பொருட்களை திருட முயன்ற இருவரையும் பிடித்து சூரமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் வெள்ளிப்பொருட்களை திருட முயன்றவர்கள், சேலம் பழைய சூரமங்கலத்தை அடுத்துள்ள அரியாக்கவுண்டம்பட்டியை சேர்ந்த வினோத் (27), இவருடைய நண்பரான சூரமங்கலத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (45) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
இவர்களில் வினோத் ஏற்கனவே கணேச சங்கரனிடம் வெள்ளி வேலை செய்து வந்தவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.