காதல் ஜோடி ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை


காதல் ஜோடி ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை
x

காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தாம்பரம் அருகே சோகத்தை ஏற்படுத்தியது.

பீர்க்கன்காரணை,

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள பீர்க்கன்காரணை கண்ணன் தெருவில் வசித்து வந்தவர் ஜெயராமன்(வயது 29). எம்.காம் பட்டதாரியான இவரது சொந்த ஊர் உத்திரமேரூர் ஆகும். கடந்த சில ஆண்டுகளாக பீர்க்கன்காரணை பகுதியில் தனது தாய் மற்றும் சகோதரருடன் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இவர், உத்திரமேரூர் பகுதியில் கல்லூரியில் படிக்கும்போது அதே பகுதியை சேர்ந்த யுவராணி(26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. பி.டெக் பட்டதாரியான யுவராணியும், ஜெயராமனும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் யுவராணி, தனது காதலனை பார்க்க பீர்க்கன்காரணை பகுதியில் உள்ள ஜெயராமன் வீட்டுக்கு வந்தார். ஜெயராமனின் தாயார் மற்றும் சகோதரர் இருவரும் வேலைக்கு சென்று விட்டதால் காதல் ஜோடிகள், ஆன்லைன் மூலம் மதிய உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டனர்.

பின்னர் இருவரும் வீட்டில் உள்ள மின்விசிறியில், ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ஜெயராமனின் தாயார், யுவராணியுடன் தனது மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்துவந்த பீர்க்கன்காரணை போலீசார், தூக்கில் தொங்கிய காதல் ஜோடியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காதலுக்கு எதிர்ப்பு

ேமலும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். ஜெயராமன், யுவராணி இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள். இதனால் இவர்களின் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் கடந்த சில நாட்களாக யுவராணிக்கு வேறு ஒரு மாப்பிள்ளைைய மும்முரமாக தேடி வந்தனர்.

இதனால் மனம் உடைந்த காதலர்கள், ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story