ஒரு வழிப்பாதையை முறையாக கடைபிடிக்க வேண்டும்
கூடலூரில் காலை, மாலை நேரங்களில் ஒரு வழிப்பாதையை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு, போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
கூடலூர்,
கூடலூரில் காலை, மாலை நேரங்களில் ஒரு வழிப்பாதையை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு, போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
போக்குவரத்து நெருக்கடி
தமிழகம்-கேரளா, கர்நாடகா என 3 மாநிலங்கள் சந்திக்கும் இடமாக கூடலூர் திகழ்கிறது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் மற்றும் கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு சரக்கு லாரிகளும் இயக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடி தவிர்க்க முடியாததாக உள்ளது.
இதனிடையே பள்ளிகள், கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படும் நாட்களில் காலை, மாலை நேரங்களில் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவுக்கு வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகளும் சாலையின் இருபுறமும் நடந்து செல்கின்றனர். இதன் காரணமாக காலை, மாலை நேரத்தில் ஒருவழிப்பாதை அமல்படுத்தப்படுகிறது.
ஒரு வழிப்பாதை
கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தாலுகா அலுவலகம் செல்லும் சாலை, ஓவேலியில் இருந்து கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ஹெல்த் கேம்ப் சாலை வழியாக கூடலூர் நகருக்குள் செல்ல காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஒரு வழிப்பாதையாக வாகனங்கள் இயக்கப்படுகிறது. இந்த நடைமுறையை சில வாகன ஓட்டிகள் கடைபிடிப்பது இல்லை. இந்தநிலையில் பழைய பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், வாகன ஓட்டிகளுக்கு தெரியாத வகையில் இருந்த அறிவிப்பு பலகையை போலீசார் அகற்றி மறுபுறம் நட்டனர்.
தொடர்ந்து நிர்ணயித்த நேரத்தில் ஒரு வழிப்பாதையில் செல்லாமல், விதியை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து உள்ளனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் கூறும்போது, ஒரு வழிப்பாதையை காலை, மாலை நேரங்களில் வாகன ஓட்டிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும். தொடர்ந்து வாகனங்கள் சீராக செல்ல ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.