பொதுத்துறை மூலம்ரப்பர் தொழிற்சாலை அமைக்க வேண்டும்மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் வலியுறுத்தல்


பொதுத்துறை மூலம்ரப்பர் தொழிற்சாலை அமைக்க வேண்டும்மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொதுத்துறை அல்லது கூட்டுறவுத்துறை மூலம் குமரி மாவட்டத்தில் ரப்பர் தொழிற்சாலை தொடங்க வேண்டும் என்று மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

பொதுத்துறை அல்லது கூட்டுறவுத்துறை மூலம் குமரி மாவட்டத்தில் ரப்பர் தொழிற்சாலை தொடங்க வேண்டும் என்று மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட பஞ்சாயத்துக் கூட்டம்

குமரி மாவட்ட பஞ்சாயத்தின் சாதாரணக் கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் அம்பிளி, செலின்மேரி, பரமேஸ்வரன், லூயிஸ், ராஜேஷ்பாபு, ஜோபி, ஷர்மிளா ஏஞ்சல், ஜான்சிலின் விஜிலா, நீலபெருமாள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ரூ.3 கோடி கடன்

கூட்டம் தொடங்கியதும் தாட்கோ திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கவுன்சிலர்கள் கேள்விகளுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் (பொறுப்பு) அய்யப்பன் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் 'தாட்கோ மூலம் 12 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு ரூ.3 கோடி வரை இந்த திட்டங்கள் மூலம் பயனாளிகளுக்கு கடன் வழங்கலாம். குமரி மாவட்டத்தில் பயனாளிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு காரணம் குறைவாகத்தான் மனுக்கள் வந்துள்ளன. தாட்கோ திட்டங்கள் தொடர்பாக மாவட்டம் முழுவதும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

பின்னர் போக்குவரத்து துறை குறித்த விவாதத்துக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக துணை மேலாளர் (வணிகம்) ஜெரோலின் பதில் அளித்து பேசினார். அப்போது அவரிடம் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் கவுன்சிலர்கள், 'பல்வேறு வழித்தடங்களில் நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும். மலைகிராம மக்கள் பயன்பெறும் வகையில் சிறிய பஸ்களை இயக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தனர்.

அதிகாரிகள் மீது நடவடிக்கை

பின்னர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ் பேசும்போது, 'இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் 2 முறை அழைக்கப்பட்டும் கூட்டத்தில் கலந்துகொள்ள வில்லை. இதேபோல் மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்துக்கு அழைக்கப்பட்டும் வராத அதிகாரிகள் மீது கலெக்டர் மூலம் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்த கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் தெரிவிக்க வேண்டும்' என்றார்.

தொடர்ந்து மாவட்ட பஞ்சாயத்தின் உணவு மற்றும் வேளாண்மைக்குழு தலைவராக அம்பிளி, தொழில்கள் மற்றும் தொழிலாளர் குழு தலைவராக ராஜேஷ்பாபு, பொதுப்பணிக்குழு தலைவராக ஜாண்சிலின் விஜிலா, கல்விக்குழு தலைவராக நீலபெருமாள், சுகாதாரக்குழு தலைவராக பரமேஸ்வரன் ஆகியோரும், ஒவ்வொரு குழுவிலும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட 3 பேர் உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டதை மாவட்ட பஞ்சாயத்து அங்கீகரித்தது.

ரப்பர் தொழிற்சாலை

பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

நடைபாதை வியாபாரிகளுக்கு மத்திய அரசு கடன் கொடுக்கும் திட்டத்தை வங்கிகள் விரைவு படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனம் அல்லது கூட்டுறவுத்துறை மூலம் குமரி மாவட்டத்தில் ரப்பர் தொழிற்சாலை தொடங்கி, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த தமிழக அரசை கேட்டுக்கொள்வது. கொல்லங்கோட்டில் இருந்து மணக்குடி வரை உள்ள கடற்கரை சாலைகளை சீர்படுத்தி போக்குவரத்தை துரிதப்படுத்தி, தடையின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும். அதங்கோட்டில் தமிழ்ப்பெரும் புலவர் அதங்கோட்டாசானுக்கு வெண்கலச்சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story