கூலி வேலைக்கு செல்லும் மாணவர்களை ஐ.டி.ஐ.யில் சேர்க்கும் திட்டம்
திறமையான இளைஞர்களை உருவாக்கும் வகையில் கூலி வேலைக்கு செல்லும் மாணவர்களை ஐ.டி.ஐ., பாலிக்டெக்னிக் கல்லூரியில் சேர்க்கும் திட்டத்துக்கு 245 பள்ளிகளில் 19-ந்தேதி சிறப்பு முகாம் நடக்கிறது.
திறமையான இளைஞர்களை உருவாக்கும் வகையில் கூலி வேலைக்கு செல்லும் மாணவர்களை ஐ.டி.ஐ., பாலிக்டெக்னிக் கல்லூரியில் சேர்க்கும் திட்டத்துக்கு 245 பள்ளிகளில் 19-ந்தேதி சிறப்பு முகாம் நடக்கிறது.
வேலைக்கு செல்லும் மாணவர்கள்
தமிழக அரசு மாணவ-மாணவிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையொட்டி பள்ளிக்கு வராத மாணவ-மாணவிகளை கண்காணித்து அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவது உறுதி செய்யப்படுகிறது. மேலும் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவ-மாணவிகளை கண்டறிந்து உரிய ஆலோசனை, பயிற்சி அளித்து மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே கொரோனா காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாததால், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்தன. அந்த காலக்கட்டத்தில் ஏழை குடும்பங்களை சேர்ந்த ஒருசில மாணவ-மாணவிகள் வேலைக்கு சென்றுவிட்டனர். அதேபோல் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சிபெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்களில் சிலர் படிப்பை தொடராமல் கூலி வேலைக்கு செல்கின்றனர்.
திறமையான இளைஞர்கள்
இவர்கள் பெரும்பாலும் கட்டிட வேலை, ஓட்டல்கள், ஜவுளிக்கடைகளுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். பள்ளி படிப்போடு வேலைக்கு சென்றுவிட்டதால் கூலி வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதை தவிர்த்து அவர்களை எதிர்காலத்தில் திறமையான இளைஞர்களாக உருவாக்கும் வகையில் அரசு புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
அதன்படி 10, 12-ம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்து கூலி வேலைக்கு செல்வோரை அரசு ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்த்து இலவசமாக படிக்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன்மூலம் எதிர்காலத்தில் சுயதொழில் செய்யும் அளவுக்கு திறமையான இளைஞர்களாக உருவாகுவதோடு, பிறருக்கும் வேலை கொடுக்கும் அளவுக்கு அவர்கள் உயர்ந்து விடும் வாய்ப்பு உள்ளது.
19-ந்தேதி சிறப்பு முகாம்
இதற்காக மாநிலம் முழுவதும் மாணவ-மாணவிகள் ஏற்கனவே படித்த பள்ளிகளில் வருகிற 19-ந்தேதி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 245 பள்ளிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது.
இதையொட்டி பள்ளியில் படித்துவிட்டு வேலைக்கு செல்பவர்களை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் தொடர்பு கொண்டு வருகின்றனர். எனவே படிப்பை தொடர முடியாமல் வேலைக்கு செல்பவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் நடைபெறும் முகாமில் பங்கேற்று, அரசு ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் கல்லூரியில் இலவசமாக உதவித்தொகையுடன் படித்து பயன்பெறலாம் என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.