திறந்தவெளி பார் போல் செயல்படும் பள்ளி வளாகம்


திறந்தவெளி பார் போல் செயல்படும் பள்ளி வளாகம்
x

வத்தலக்குண்டுவில், திறந்தவெளி பார் போல அரசு பள்ளி வளாகம் செயல்படுகிறது.

திண்டுக்கல்

வத்தலக்குண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும். இந்த பள்ளி, ஆங்கில எழுத்தான 'எச்' வடிவில் கட்டப்பட்டு இருப்பது கூடுதல் சிறப்பு. நூற்றாண்டு விழா கண்ட இப்பள்ளியில் தற்போது 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் பள்ளி வளாகத்தில் அதிகாலை நேரத்தில் ஏராளமானோர் உடற்பயிற்சி செய்து வருகின்றனர்.

பள்ளியில் இரவு நேர காவலாளி கிடையாது. இதனால் பகலில் பள்ளியாகவும், இரவில் திறந்தவெளி மதுபார் போலவும் செயல்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனை நிரூபிக்கும் வகையில், பள்ளியின் மைதானத்தில் அமர்ந்து குடிமகன்கள் மதுபானம் குடிப்பது வாடிக்கையாகி விட்டது. அங்கு டம்ளர், மதுபாட்டில்கள் கிடப்பதே அதற்கு சான்றாக உள்ளது. சில சமயத்தில் போதை தலைக்கு ஏறியதும் மதுபிரியர்கள், பள்ளி வளாகத்திலேயே பாட்டில்களை உடைத்து விட்டு செல்கின்றனர். மாணவர்களின் பாதங்களை, அவை பதம் பார்த்து விடுகின்றன. மேலும் அங்கு நடை பயிற்சி மேற்கொள்வோரும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள், நடைபயிற்சிக்கு வருவோர் என அனைத்து தரப்பினரும் வேதனை அடைந்துள்ளனர். எனவே பள்ளிக்கு உடனடியாக இரவு நேர காவலாளியை நியமிக்க வேண்டும் என்றும், இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story