லாரி மோதி பள்ளி மாணவி பலி
ஆலங்காயம் அருகே லாரி மோதி பள்ளி மாணவி பரிதாபமாக உயிாிழந்தாள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள ஜம்புபள்ளம் பகுதியை சேர்ந்தவர் சிவா (வயது 35), கட்டிட மேஸ்திரி. இவருக்கு சங்கீதா (26) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவரது இளைய மகள் கார்த்திகா (6), மேல்நிம்மியம்பட்டு பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள். வழக்கம்போல் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய மாணவி கார்த்திகா இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் மாலை நேர வகுப்பிற்கு வீட்டில் இருந்து சென்றாள்.
ஜம்புபள்ளம் பெட்ரோல் பங்க் அருகே கார்த்திகா சாலையை கடக்க முயன்ற போது, ஆந்திர மாநிலத்தில் இருந்து தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு நிம்மியம்பட்டை அடுத்த 102 ரெட்டியூர் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாராத விதமாக சிறுமியின் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட சிறுமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்காயம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.