வேடசந்தூர் அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பலி


வேடசந்தூர் அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
x

வேடசந்தூர் அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள உசிலம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் கேசவன் (வயது 12). இவன் உசிலம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது அரையாண்டு விடுமுறை என்பதால் கேசவன், தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தான்.

இந்தநிலையில் இன்று அவன், தனது நண்பர்களுடன் உசிலம்பட்டி அருகே புலிக்காட்டில் உள்ள பாறை குட்டையில் குளிக்க சென்றான். அங்கு நண்பர்கள் அனைவரும் குட்டையில் குதித்து குளித்து கொண்டிருந்தனர். கேசவனும் குட்டையில் இறங்கி குளித்தான். ஆனால் அவனுக்கு நீச்சல் தெரியாததால் குட்டை நீரில் மூழ்கினான். இதற்கிடையே கேசவன் நீரில் மூழ்கியதை பார்த்த நண்பர்கள், அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தனர். அவர்கள் இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ்அருள்பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, குட்டையில் மூழ்கிய மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேர தேடுதலுக்கு பிறகு இறந்த நிலையில் கேசவனின் உடலை தீயணைப்பு படைவீரர்கள் மீட்டனர். பின்னர் கேசவனின் உடலை எரியோடு போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story