சரக்கு வேன் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி
கீரனூர் அருகே சரக்கு வேன் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
சிறுவன் சாவு
கீரனூர் அருகே மங்கதேவன்பட்டியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. தொழிலாளி. இவரது மகன் ஆனந்த் (வயது 6). திருநாவுக்கரசு நேற்று மாலை தனது வீட்டு அருகே சரக்கு வேனில் விறகுகளை ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்களுடன் ஆனந்த்தும் வேனை சுற்றி விளையாடி கொண்டிருந்தான். இதற்கிடையே விறகுகளை ஏற்றிக்கொண்டு வேனை டிரைவர் பின்பக்கமாக திரும்பினார்.
அப்போது வேனில் அருகில் விளையாடி கொண்டிருந்த ஆனந்த் வேனின் பின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தான். சக்கரத்தில் சிக்கிய சிறுவன் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக கீரனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீரனூர் போலீசார் விபத்தை ஏற்படுத்திய சரக்கு வேன் டிரைவர் மங்கதேவன்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (19) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.