மூட்டுவலிக்கு ஊசி போட்ட பள்ளி மாணவன் திடீர் சாவு


மூட்டுவலிக்கு ஊசி போட்ட பள்ளி மாணவன் திடீர் சாவு
x
தினத்தந்தி 28 May 2023 12:15 AM IST (Updated: 28 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி தனியார் ஆஸ்பத்திாியில் மூட்டுவலிக்கு ஊசி போட்ட பள்ளி மாணவன் திடீரென இறந்தான். அவனது சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்

விழுப்புரம்

செஞ்சி

இந்த பரபரப்பான சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

பள்ளி மாணவன்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா கரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயரங்கன் மகன் நரேஷ்(வயது 12). பண்ருட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வரும் இவனுக்கு மூட்டு வலி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நரேசை சிகிச்சைக்காக அவனது தாய் ஜெயசித்ரா செஞ்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர் நரம்பு ஊசி மற்றும் 2 பக்க இடுப்புகளிலும் தலா ஒரு ஊசியும் என மொத்தம் 3 ஊசிகள் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

மயங்கினான்

ஊசி போட்ட சிறிது நேரத்தில் நரேசுக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் பதற்றம் அடைந்த ஜெயசித்ரா அவனை டாக்டரிடம் தூக்கிச்சென்று காண்பித்தபோது அவர் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு கூறினார்.

இதையடுத்து அவர் நரேசை செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுமாறு தெரிவித்தனர்.

பரிதாப சாவு

உடனே நரேசை தனியார் ஆம்புலன்ஸ்சில் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவன் பரிதாபமாக இறந்தான். நரேசின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

சாவில் சந்தேகம்

இந்த நிலையில், இதுகுறித்து செஞ்சி போலீஸ் நிலையத்தில் ஜெயசித்ரா புகார் கொடுத்தார். அதில் தனது மகனை மூட்டு வலிக்காக செஞ்சி பஸ் நிலையம் எதிரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றேன். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர் 3 ஊசிகளை போட்டார். இதில் மயங்கி விழுந்த அவனை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவன் இறந்துவிட்டான். டாக்டர் 3 ஊசி போட்டதால்தான் அவன் இறந்து விட்டான் என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட டாக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

போலீசார் விசாரணை

இதையடுத்து நரேசின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மூட்டு வலிக்காக ஊசி போட்ட மாணவன் திடீரென இறந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story