பட்டிவீரன்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி மாணவன் பலி


பட்டிவீரன்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி மாணவன் பலி
x

பட்டிவீரன்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

திண்டுக்கல்

பட்டிவீரன்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

பள்ளி மாணவன்

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள நல்லாம்பிள்ளை கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. அவருடைய மகன் பிரமோத் (14). இவன், சிங்காரப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து படித்து வந்தான்.

இந்தநிலையில் இன்று விடுமுறை என்பதால், பிரமோத் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்துக்கு சென்றான். அப்போது அங்குள்ள 80 அடி ஆழமுள்ள கிணற்றில் நண்பர்கள் குளித்தனர்.

பிரமோத்துக்கு நீச்சல் தெரியாததால் கிணற்றின் பக்கவாட்டில் அமர்ந்தபடி நண்பர்கள் குளிப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். அப்போது திடீரென்று பிரமோத் கால் தவறி கிணற்றில் விழுந்துவிட்டான். நீச்சல் தெரியாத நிலையில் அவன் கிணற்றில் மூழ்கினான்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள், பிரமோத் கிணற்றில் மூழ்கியது குறித்து கிராமத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள், உடனடியாக பட்டிவீரன்பட்டி போலீசார் மற்றும் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

உடல் மீட்பு

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு படைவீரர்கள் கிணற்றில் இறங்கி, நீரில் மூழ்கிய பிரமோத்தை தேடி பார்த்தனர். ஆனால் கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனையடுத்து மின் மோட்டார் மூலம் கிணற்றில் உள்ள தண்ணீரை வெளியேற்றிவிட்டு தேடும் பணியை தொடர்ந்தனர். சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பிரமோத்தின் உடலை மீட்டனர். அவனது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதனையடுத்து அவனது உடலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story