கோடை விடுமுறையில் பாட்டி வீட்டுக்கு வந்த பள்ளி மாணவன் குட்டையில் மூழ்கி பலி


கோடை விடுமுறையில் பாட்டி வீட்டுக்கு வந்த பள்ளி மாணவன் குட்டையில் மூழ்கி பலி
x
தினத்தந்தி 6 Jun 2023 3:18 AM IST (Updated: 6 Jun 2023 3:01 PM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே கோடை விடுமுறையில் பாட்டி வீட்டுக்கு வந்த பள்ளி மாணவன் குளிக்க சென்ற போது குட்டையில் மூழ்கி இறந்தான்.

சேலம்

ஓமலூர்:

பள்ளி மாணவன்

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் 1-வது வார்டு ராமர் கோவில் பகுதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி சங்கீதா. இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுடைய மகன் தேவானந்தன் (வயது 9). இவன் அயோத்தியாப்பட்டணம் அரசுப்பள்ளியில் 3-ம் வகுப்பு முடித்து விட்டு 4-ம் வகுப்புக்கு செல்ல இருந்தான்.

இந்த நிலையில் தேவானந்தன் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கோடை விடுமுறைக்காக குண்டுக்கல் ஜோடுகுளி அருகே உள்ள தனது தாய் வழி பாட்டியான ராணி வீட்டிற்கு வந்துள்ளான். நேற்று மதியம் தேவானந்தன் தனது தாய்மாமன் மகனான வெற்றிவேல் (10) என்ற சிறுவனுடன் குண்டுக்கல் ஒட்டக்கரை குட்டைக்கு குளிக்க சென்று உள்ளான்.

நீச்சல் தெரியாமல் குட்டையில் இறங்கிய தேவானந்தன் தண்ணீரில் தத்தளித்து மூழ்கி இறந்தான். இதையடுத்து உடன் வந்த சிறுவன் வெற்றிவேல் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அபய குரல் எழுப்பவே அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தனர்.

பின்னர் அவர்கள் காடையாம்பட்டி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு காடையாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜசேகர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று குட்டையில் மூழ்கிய சிறுவனை தேடினர்.

உடல் மீட்பு

சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு சிறுவனின் உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர். சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கோடை விடுமுறைக்காக பாட்டி வீட்டிற்கு வந்த பள்ளி சிறுவன் குட்டையில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story