சிமெண்டு தொட்டியில் வீசப்பட்ட உலோகச்சிலை
சிமெண்டு தொட்டியில் வீசப்பட்ட உலோகச்சிலை மீட்கப்பட்டது.
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள ஒக்கரை கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜூ (வயது 43). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் சிக்கத்தம்பூர் ஆலமரம் பட்டவன் கோவில் அருகே உள்ள காலியிடத்தை வாங்கினார். அந்த காலியிடத்தில் ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் வைப்பதற்காக சிமெண்டு தொட்டி வைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று அவர் காலியிடத்துக்கு சென்றார். அப்போது, அங்கு வைக்கப்பட்டு இருந்த சிமெண்டு தொட்டிக்குள் ஒரு பை கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அந்த பையை பிரித்து பார்த்தார்.அப்போது, அந்த பையில் உலோக சாமி சிலை இருந்தது. யாரோ மர்ம ஆசாமிகள் அந்த சிலையை வீசி சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து உப்பிலியபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் அந்த சிலை சுமார் 5 கிலோ எடை கொண்டதாகவும், 1½ அடி உயரம் கொண்டதாகவும் இருந்தது. ஒருபக்கம் சூரியநாராயணார் உருவமும், மறுபுறம் நரசிம்மர் உருவமும் கொண்டதாகவும் இருந்தது. இதைத்தொடர்ந்து சிலையை கைப்பற்றிய போலீசார் அதனை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிலையை யாராவது கடத்தி வந்து இங்கு வீசி சென்றார்களா? அல்லது வீட்டில் பூஜைக்காக வைக்கப்பட்டு இருந்த சிலையை யாராவது திருடி கொண்டு வந்து வீசி சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.