மதுபாட்டில் கடன் கொடுக்க மறுத்த விற்பனையாளரைஅரிவாளால் வெட்டிய 2 பேர் கைது
சமயபுரத்தில் அரசு மதுபானக்கடையில் மதுபாட்டில் கடன் கொடுக்க மறுத்த விற்பனையாளரை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சமயபுரத்தில் அரசு மதுபானக்கடையில் மதுபாட்டில் கடன் கொடுக்க மறுத்த விற்பனையாளரை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடன் கொடுக்க மறுப்பு
சமயபுரம் நால்ரோட்டில் 2 அரசு மதுபானக்கடைகள் இயங்கி வருகிறது. இதில். நால்ரோட்டில் மேற்கு பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபானக்கடையில் மேற்பார்வையாளராக மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சா.அய்யம்பாளையத்தை சேர்ந்த நாகராஜ் (வயது 47) என்பவரும், விற்பனையாளர்களாக திருத்தலையூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்(42), குமார் மற்றும் கமல் ஆகியோர் பணியில் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது பாட்டில்கள் வாங்க ஏராளமானோர் அந்த கடைக்கு வந்திருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் மதுபாட்டில்களை கடன் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதற்கு பாலகிருஷ்ணன் இது தனியார் கடை அல்ல, அரசு மதுபானக்கடை, காசு இருந்தால் மட்டுமே மதுபாட்டில் கொடுக்கப்படும் என்று கூறி மறுத்துவிட்டார்.
சரமாரி அரிவாள் வெட்டு
இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் ஏற்கனவே கையில் தயாராக வைத்திருந்த அரிவாளை எடுத்து பாலகிருஷ்ணன் தலை மற்றும் வலது கையில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.
2 பேர் கைது
இந்நிலையில், நேற்று சமயபுரத்திலிருந்து அக்கரைப்பட்டி செல்லும் சாலையில் நின்று கொண்டிருந்த சமயபுரம் சோலை நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஷியாம் சுந்தர் (22), வேட்டைக்கார தெருவை சேர்ந்த மருதை மகன் சந்திரசேகர் (24) ஆகிய 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் டாஸ்மாக் விற்பனையாளரை அரிவாளால் வெட்டியவர்கள் என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.