தன்னை கடித்த பாம்பை எடுத்து வந்த வாலிபரால் பரபரப்பு
நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு நள்ளிரவில் தன்னை கடித்த பாம்பை எடுத்து வந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு நள்ளிரவில் தன்னை கடித்த பாம்பை எடுத்து வந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில் திருவிழா
நாகை மாவட்டம் திருமருகல் அருகே கல்லூழி திருவாசல் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது21). நேற்று முன்தினம் இரவு இந்த பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதையொட்டி அம்மன் வீதி உலா நடந்தது.
மகேந்திரன் தனது வீட்டு வாசலில் அமர்ந்து அம்மன் வீதி உலாவை பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மகேந்திரன் அருகே வந்த 4 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு அவரை கடித்தது. இதனால் பதறிப்போன மகேந்திரன் அங்கிருந்தவர்கள் உதவியுடன் தன்னை கடித்த பாம்பை அடித்தார்.
பாம்புடன் சென்றதால் பரபரப்பு
பின்னர் அதை எடுத்து ஒரு பையில் போட்டுக் கொண்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வந்தார். பாம்புடன் வந்த அவரைப் பார்த்து டாக்டர்களும், செவிலியர்களும் மற்றும் அங்கிருந்த பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பாம்பை தனது செல்போனில் படம் பிடித்து கொண்டு வந்து டாக்டர்களிடம் காண்பித்தார். இதை தொடர்ந்து மகேந்திரனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
நாகையில் நள்ளிரவில் தன்னை கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.