சென்னிமலை அருகே பரபரப்பு சம்பவம்தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி ரூ.23 லட்சம் கொள்ளை
சென்னிமலை அருகே பட்டப்பகலில் தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி சென்றதுடன், அவரை கத்தியால் குத்தி ரூ.23 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னிமலை
சென்னிமலை அருகே பட்டப்பகலில் தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி சென்றதுடன், அவரை கத்தியால் குத்தி ரூ.23 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இரும்பு தொழிற்சாலை
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஈங்கூரில் தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையின் மேலாளராக சென்னிமலையை அடுத்த கே.ஜி.வலசு அருகே உள்ள சேர்வைக்காரன்வலசை சேர்ந்த மகேந்திரன் (வயது 39) என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். அலுவலக பணியாளராக பெருந்துறையில் உள்ள பெத்தாம்பாளையம் ரோட்டை சேர்ந்த சத்தியமூர்த்தி (47) என்பவரும், காசாளராக சேகரும் வேலை செய்து வருகிறார்கள்.
பண பரிவர்த்தனை
இந்த தொழிற்சாலையின் மற்றொரு கிளை அதே பகுதியான ஈங்கூர் பாலப்பாளையம் அருகில் இயங்கி வருகிறது.
தினமும் காலை நேரத்தில் ஈங்கூர் தொழிற்சாலையில் இருந்து அலுவலக ஊழியர்கள் பாலப்பாளையம் தொழிற்சாலைக்கு பணம் கொண்டு சென்று அங்கு பண பரிவர்த்தனை முடிந்த பிறகு மீண்டும் மாலையில் ஈங்கூர் தொழிற்சாலைக்கு சென்று விடுவது வழக்கம்.
நிறுவனத்தின் காரில்...
அதன்படி நேற்று முன்தினம் மாலையில் வழக்கம்போல் நிறுவனத்தின் அலுவலக பணியாளர் சத்தியமூர்த்தி, பாலப்பாளையம் தொழிற்சாலையில் பண பரிவர்த்தனை முடிந்த பின்னர் மீதி உள்ள ரூ.23 லட்சத்தை எடுத்து கொண்டு நிறுவனத்துக்கு சொந்தமான காரில் ஈங்கூர் தொழிற்சாலைக்கு புறப்பட்டு சென்றார்.
சத்தியமூர்த்தி ஓட்டி சென்ற காருக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் காசாளரான சேகர் சென்றார். சிறிது நேரத்தில் ஈங்கூர் தொழிற்சாலைக்கு சேகர் சென்றுவிட்டார். ஆனால் 10 நிமிடத்தில் வரவேண்டிய சத்தியமூர்த்தியின் கார் ½ மணி நேரம் ஆகியும் ஈங்கூர் தொழிற்சாலைக்கு வரவில்லை. இதனால் சத்தியமூர்த்திக்கு காசாளர் சேகர் போன் செய்து உள்ளார். அப்போது சத்தியமூர்த்தியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த சேகர் மற்றும் நிறுவன ஊழியர்கள் ஈங்கூர் மற்றும் பாலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சத்தியமூர்த்தியின் காரை தேடி உள்ளனர். ஆனால் கார் எங்கும் கிடைக்கவில்லை.
ரூ.23 லட்சம் கொள்ளை
இந்த நிலையில், மேலாளர் மகேந்திரனுக்கு சத்தியமூர்த்தி போன் செய்து உள்ளார். அப்போது அவர் கூறுகையில், 'பாலப்பாளையம் பிரிவு அருகே காரில் வந்து கொண்டிருந்தபோது எதிரே மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் என்னுடைய காரை வழி மறித்தனர். உடனே நான் காரை நிறுத்தினேன். அப்போது மேலும் 2 பேர் அங்கு மோட்டார்சைக்கிளில் வந்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து என்னை கத்தியை காட்டி மிரட்டியதுடன் கை, கால்களை கட்டி வாயில் பேப்பரை வைத்து திணித்தனர். எனினும் அவர்களிடம் இருந்து நான் தப்பிக்க முயன்றேன். ஆனால் அவர்கள் என்னை கத்தியால் குத்துவிட்டனர். பின்னர் அவர்கள் நான் ஓட்டி வந்த காருடன் என்னை கடத்தி சென்று ஈரோட்டை அடுத்த ரங்கம்பாளையம் குறிஞ்சி நகர் அருகே ஆட்கள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில் நிறுத்திவிட்டு ரூ.23 லட்சம், ஒரு செல்போன் ஆகியவற்றையும் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். அவர்கள் செல்லும்போது காரின் கதவுகளை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.,' என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், 'அவர்கள் சென்றதும், கைகளில் கட்டப்பட்ட கயிற்றை வாயால் அவிழ்த்தேன். பின்னர் காரின் மறைவான இடத்தில் வைக்கப்பட்டிருந்த செல்போன் மூலம் உங்களை (மகேந்திரன்) தொடர்பு கொண்டு பேசுகிறேன்,' என்றார்.
பரபரப்பு
இதைத்தொடர்ந்து மேலாளர் மகேந்திரன் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உள்ளனர். அப்போது அங்கு கதவு பூட்டப்பட்ட நிலையில் காருக்குள் கிடந்த சத்தியமூர்த்தியை காரின் கண்ணாடியை உடைத்து மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக நிறுவனத்துக்கு சொந்தமான ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் இதுகுறித்து சென்னிமலை போலீசில் மேலாளர் மகேந்திரன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் பிரியா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி, கத்தியால் குத்தி பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் சென்னிமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.