புஞ்சைபுளியம்பட்டி அருகே பரபரப்பு சம்பவம் ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்தி தாக்கிய மர்ம கும்பல்


புஞ்சைபுளியம்பட்டி அருகே பரபரப்பு சம்பவம்  ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்தி தாக்கிய மர்ம கும்பல்
x

புஞ்சைபுளியம்பட்டி அருகே ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்தி சென்று மர்ம கும்பல் தாக்கியதுடன், அவரை மதுரையில் இறக்கி விட்டு தப்பி சென்றது.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி அருகே ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்தி சென்று மர்ம கும்பல் தாக்கியதுடன், அவரை மதுரையில் இறக்கி விட்டு தப்பி சென்றது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரியல் எஸ்டேட் அதிபர்

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள காரப்பாடி ஐஸ்வர்யா கார்டன் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 53). ரியல் எஸ்டேட் அதிபர். இவருடைய மனைவி ராஜேஸ்வரி.

கடந்த 14-ந் தேதி பாபு தனது மனைவி ராஜேஸ்வரியிடம் வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு காரில் புறப்பட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய மனைவி ராஜேஸ்வரி பல இடங்களிலும் தேடிப்பார்த்தார். ஆனால் அவரால் பாபுவை கண்டுபிடிக்க முடியவில்லை.

புகார்

இதனிடையே புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள செல்லப்பம்பாளையத்தில் காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், பாபுவை அவர்களுடைய காரில் ஏற்றி சென்றதுடன், பாபுவின் காரையும் எடுத்து சென்றது என ராஜேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து அவர் புஞ்சைபுளியம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மர்மகும்பல்

இந்த நிலையில் நேற்று முன்தினம் புஞ்சைபுளியம்பட்டிக்கு பாபு வந்தார். உடனே போலீசார் விரைந்து சென்று பாபுவிடம் விசாரணை நடத்தினர். 'அவரை அடையாளம் தெரியாத 4 பேர் காரில் கடத்தி கொண்டு மதுரைக்கு சென்றதாகவும், அங்கு வைத்து அவரை தாக்கியதுடன், அவரிடம் இருந்து தங்க சங்கிலி மற்றும் பணத்தை பிடுங்கி கொண்டு மதுரை பஸ் நிலையத்தில் இறக்கி விட்டதுடன், அவருடைய காரையும் எடுத்து சென்றுவிட்டதாக விசாரணையின்போது தெரிவித்தார். அதன் பிறகு அவர் அங்கிருந்து பஸ்சில் புஞ்சைபுளியம்பட்டி வந்தார்.

மேலும் மர்ம கும்பல் தாக்கியதில் பாபுவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

வலைவீச்சு

இதுதொடர்பாக புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார் பாபுவை காரில் கடத்தி தாக்கிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். ரியல் எஸ்டேட் அதிபரை மர்ம கும்பல் காரில் கடத்தி மதுரையில் இறக்கிவிட்டு தப்பி சென்ற சம்பவம் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story