கலெக்டர் அலுவலகத்தில் போலீசாருக்கு தனி அறை


கலெக்டர் அலுவலகத்தில் போலீசாருக்கு தனி அறை
x
தினத்தந்தி 23 Nov 2022 12:30 AM IST (Updated: 23 Nov 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

பாதுகாப்பு

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனு கொடுக்கிறார்கள். மேலும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடப்பதால் அன்றைய தினம் கூட்டம் அதிகமாக இருக்கும். அவ்வாறு வரும் பொதுமக்களில் சிலர் அவ்வப்போது தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபடும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

எனவே அசம்பாவிதங்களை தடுக்க கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கலெக்டர் அலுவலகத்துக்குள் வரும் அனைவரது உடமைகளையும் சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கிறார்கள். இந்த பணியில் 2-ல் இருந்து 3 போலீசார் ஈடுபடுகிறார்கள். சில நேரங்களில் 5 போலீசார் ஈடுபடுவார்கள். இதில் பெண் போலீசாரும் அடங்குவர்.

போலீசாருக்கு தனி அறை

ஆனால் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு என்று தனி அறை எதுவும் இல்லை. இதனால் போலீசார் தங்களது உடமைகளை எங்காவது வைத்துவிட்டு வந்து பணியில் ஈடுபடுவார்கள். அதிக வெயில் அடித்தாலும், மழை பெய்தாலும் அங்குள்ள ஆவின் பாலகத்தில் தஞ்சம் அடைந்து கொள்வார்கள். இவ்வாறு போலீசார் சிரமம் அடைந்து வந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் போலீசாருக்கு என்று தனி அறை ஒதுக்க கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலக முன் பகுதியில் காலியாக இருந்த ஒரு அறை போலீசாருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு சுத்தம் செய்யும் பணி நேற்று தீவிரமாக நடந்தது. பணிகள் முடிவடைந்ததும் போலீசார் தங்களது உடமைகளை அந்த ஓய்வு அறையில் வைத்தனர். அறை ஒதுக்கித்தந்த கலெக்டர் அரவிந்த்துக்கு போலீசார் நன்றி தெரிவித்தனர்.


Next Story