கீரமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்க வேண்டும்


கீரமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்க வேண்டும்
x

கீரமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

புதுக்கோட்டை

எல்லை வரையறை

புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்படும் போது தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்த கீரமங்கலம் உள்பட சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. சுற்றுவட்டார கிராம மக்கள் தினசரி வந்து செல்லும் இடமாக கீரமங்கலம் உள்ளது. பூ, காய்கறிகள், வாழை, பலா, தேங்காய், மிளகாய் உள்ளிட்ட விளை பொருட்களின் விற்பனை செய்யும் சந்தை பகுதியாகவும் உள்ளது. இந்நிலையில், கீரமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்கப்பட வேண்டும் என்பது பல வருட கோரிக்கையாக உள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் இந்த ஆண்டே கீரமங்கலத்தை தனி தாலுகாவாக உருவாக்கும் பொருட்டு வருவாய் கிராமங்களின் எல்லை வரையறை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

அலைச்சல்

கீரமங்கலத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ்:- கீரமங்கலத்தை சுற்றி ஆலங்குடி, அறந்தாங்கி தாலுகாவை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இங்குள்ள மக்கள் அன்றாடம் ஏதேனும் தேவைகளுக்காக கீரமங்கலம் வந்து செல்கின்றனர். ஆனால் தாலுகா அலுவலகத்திற்கு ஆலங்குடியோ, அறந்தாங்கியோ செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் வேம்பங்குடி மேற்கு ஊராட்சி, அறந்தாங்கி தாலுகாவிற்கு ரேஷன் பொருள் ஆலங்குடி தாலுகாவில் இருந்து வழங்கப்படுகிறது. அதனால் வருவாய்த்துறை சான்று பெற இரு தாலுகா அலுவலகங்களுக்கும் அலைந்து பின்னர் சான்று வாங்க வேண்டிய நிலை உள்ளது.

சிரமங்களை தவிர்க்கலாம்

காசிம்புதுப்பேட்டை எஸ்.டி.பசீர் அலி:- தாலுகா அலுவலகம் அமைவதற்கு வசதியாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், சார்பதிவாளர் அலுவலகம், கால்நடை மருந்தகம், அரசு மருத்துவமனை, போலீஸ் நிலையம், தீயணைப்பு நிலையம் போன்ற தேவையான அரசு அலுவலகங்களும் உள்ளது. போதிய அளவிற்கு வருவாய் கிராமங்களும், குக்கிராமங்களும் உள்ளது. போதிய பஸ் வசதி உள்ள கீரமங்கலத்தில் தாலுகா அலுவலகம் அமைந்தால் பொதுமக்களின சிரமங்களை தவிர்க்கலாம்.

சேந்தன்குடியை சேர்ந்த கண்ணன்:- கீரமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுகா உருவாக்க வேண்டும் என்ற பொதுமக்களின் பல வருட கோரிக்கையை ஒவ்வொரு முறையும் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தனி தாலுகா உருவாக்குவோம் என்று உறுதியாக சொல்கிறார்கள். ஆனால் அந்த கோரிக்கை நிறைவேறாமலேயே உள்ளது. ஆனால் அமைச்சர் மெய்யநாதன் தாலுகா கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக நம்பிக்கையோடு உறுதி கூறினார். அதன் பிறகு தற்போது எல்லை வரையறை நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இது வரையறையோடு நின்றுவிடாமல் நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே அறிவித்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story