ேடன்டீயை லாபகரமாக இயக்க தனி குழு அமைப்பு
நீலகிரி மாவட்டத்தில் ேடன்டீ நிறுவனத்தை லாபகரமாக இயக்க தனி குழு அமைக்கப்பட்டு உள்ளது என்று சட்டபேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் தெரிவித்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ேடன்டீ நிறுவனத்தை லாபகரமாக இயக்க தனி குழு அமைக்கப்பட்டு உள்ளது என்று சட்டபேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் தெரிவித்தார்.
தொழிற்சாலையில் ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் குழு உறுப்பினர்கள் குன்னூரில் உள்ள டேன்டீ தேயிலை தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டனர். தேயிலை உற்பத்தி செய்யும் எந்திரங்களை பார்வையிட்டு, அதன் விவரங்களை கேட்டறிந்தனர். தொடர்ந்து ஊட்டி உழவர் சந்தையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடந்த மஞ்சப்பை திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து ஊட்டியில் கட்டப்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி கட்டுமான பணி, சிங்காரா மின் நிலைய பணிகளை பார்வையிட்டனர். அதன் பின்னர் தமிழகம் விருந்தனர் மாளிகையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.ஆர்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
3 துறைகள்
ஆதிதிராவிடர் நலத்துறை, மின்சார துறை, சுற்றுச்சூழல் துறையை ஒருங்கிணைத்து ஆய்வு செய்து வருகிறோம். ஊட்டியில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி பணிகளை பார்வையிட்டு அடிப்படை தேவைகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது. சிங்காராவில், 150 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது. ஊட்டியை பொறுத்தவரை அடிப்படை தேவைகள் சிறப்பாக நடந்து வருகிறது.
தமிழ்நாடு தேயிலை தோட்ட நிறுவன (டேன்டீ) பிரச்சினைகளை கேட்டு உள்ளோம். டேன்டீ நிறுவனத்தில் ரூ.220 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த நிறுவனத்தை மீண்டும் லாபகரமாக இயக்க தனியாக மார்க்கெட்டிங் குழு அமைத்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
பிளாஸ்டிக் பயன்பாடு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த மஞ்சள் பை திட்டம் பொதுமக்களிடம் சிறப்பான வரவேற்பு பெற்றுள்ளது. தமிழகத்தில் ஊட்டி நகராட்சியில் தான் முதல் முதலில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டது. இதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாடு நீலகிரியில் குறைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது கலெக்டர் அம்ரித், குழு உறுப்பினர்களும், எம்.எல்.ஏ.க்களுமான அரவிந்த் ரமேஷ், அருண்மொழிதேவன், தமிழரசி, நாகை மாலி, பாலாஜி, ஜெயக்குமார் மற்றும் செயலாளர் சீனிவாசன், இணை செயலாளர் பாண்டியன், மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் மற்றும் பலர் உடனிருந்தனர்.