காய்ச்சலுக்கு கூடுதலாக தனிவார்டு அமைக்க வேண்டும்
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு கூடுதலாக தனிவார்டு அமைக்க வேண்டும் என அமலுவிஜயன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
குடியாத்தம்
குடியாத்தம் டவுன் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை கடந்த சில தினங்களாகவே அதிகரித்து வருகிறது.
மேலும் காய்ச்சலால் பாதித்த குழந்தைகளையும் பெற்றோர் அழைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் ஆகியோருடன் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சென்ற அமலுவிஜயன் எம்.எல்.ஏ. நோயாளிகளிடம் குறைகளை கேட்டதோடு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை குறித்தும் காய்ச்சலால் பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவ அலுவலர் மாறன்பாபு உள்ளிட்ட டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக 25 படுக்கைகளுடன் காய்ச்சலுக்கான தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் கூடுதலாக வார்டுகள் ஏற்படுத்த வேண்டும் எனவும், புறநோயாளிகள் பிரிவில் குறைந்த பட்சம் ஐந்து டாக்டர்கள் பணியில் அமர்த்த வேண்டும். பகல் 12 மணி வரை மருத்துவமனை இயங்க வேண்டும்.
அவசர சிகிச்சை பிரிவில் கூடுதலாக மருத்துவரை நியமிக்க வேண்டும். மாலை மற்றும் இரவு நேரங்களில் காய்ச்சலுக்காக வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக டாக்டர்களை நியமிக்க வேண்டும் என அமலுவிஜயன் எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார்.
ஆய்வுக்கு வந்த குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் ஆகியோரிடம் நகராட்சி பகுதி மற்றும் கிராம பகுதிகளில் முழு தூய்மை பணியை மேற்கொண்டு கொசு மருந்து அடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தாரை்.
அப்போது நகரமன்ற உறுப்பினர்கள் எம்.மனோஜ், ஏ.தண்டபாணி, அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர்கள் எம்.முத்து, யு.சரவணன், ஆர்.தட்சணாமூர்த்தி, எஸ்.அன்பு மற்றும் பலர் உடன் இருந்தனர்.