சிவகாசி-திருத்தங்கல் ரோட்டில் நிழற்குடை அமைக்க வேண்டும்
சிவகாசி-திருத்தங்கல் ரோட்டில் நிழற்குடை அமைக்க வேண்டும் என யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சிவகாசி,
சிவகாசி-திருத்தங்கல் ரோட்டில் நிழற்குடை அமைக்க வேண்டும் என யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
யூனியன் கூட்டம்
சிவகாசி யூனியன் கூட்டம் நேற்று காலை யூனியன் தலைவர் முத்துலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் விவேகன்ராஜ், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சீனிவாசன், ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மங்கலம், நெடுங்குளம், தச்சக்குடி, விஸ்வநத்தம், கவுண்டம்பட்டி ஆகிய பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட பகுதியில் ரூ.1 கோடியே 59 லட்சம் செலவில் வளர்ச்சி பணிகள் செய்வது உள்பட 38 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் தீர்மானங்கள் மீது கவுன்சிலர்கள் விவாதம் செய்தனர். அதன் விவரம் வருமாறு :-
கவுன்சிலர் சண்முகத்தாய்: எஸ்.என்.புரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிவகாசி-திருத்தங்கல் ரோட்டில் ஒரு நிழற்குடை அமைக்க வேண்டும்.
கலைமணி: எங்கள் பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு செல்ல போதிய சாலை வசதி இல்லை.
சேதமடைந்த சாலை
சுடர்வள்ளி: விசாலாட்சி நகரில் சாலை அமைக்க வேண்டும்.
மீனாட்சிசுந்திரி: வெள்ளூர் அரசு பள்ளி அருகில் உள்ள சாலை சேதம் அடைந்து காணப்படுகிறது. இதை சீரமைக்க வேண்டும்.
ரீட்டாஆரோக்கியம்: முனீஸ்வரன்காலனியில் உள்ள தண்ணீர் தொட்டி சேதம் அடைந்து காணப்படுகிறது.
மாரிமுத்து: செங்கமலப்பட்டியில் ரேஷன் கடை சேதம் அடைந்து இருக்கிறது. இதை சரி செய்ய வேண்டும்.
ஜெகத்சிங்பிரபு: கட்டளைப்பட்டி கிராமத்தில் உரிய அனுமதியின்றி சிமெண்டு குடோன் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் சிமெண்டு தூசி பரவி வருகிறது. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
அறிமுகம்
கவுன்சிலர்கள் கங்காகுளம் கலைமணி, அனுப்பன்குளம் அன்பரசு, தனலட்சுமி ஆகியோர் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர்.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. கவுன்சிலர் சின்னதம்பியை, யூனியன் தலைவர் முத்துலட்சுமி அறிமுகம் செய்து வைத்தார்.