வாடகை செலுத்தாத கடையின் பூட்டை உடைத்து பொருட்கள் ஜப்தி
பொருட்கள் ஜப்தி
புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமாக பஸ் நிலையம், சத்தியமங்கலம் ரோடு, மாதம்பாளையம் ரோடு, பவானிசாகர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் 40-க்கும் மேற்பட்ட கடைகள் கடந்த 2 ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இருந்த நிலையில் ஏலம் எடுத்தவர்கள் கடையை பயன்படுத்தாமல் பூட்டி வைத்துள்ளனர். இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.
மேலும் பூட்டி இருந்த கடைகளை ஏலம் விடுமாறு வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து நிலுவையில் உள்ள வாடகையை செலுத்துமாறு நகராட்சி நிர்வாகம் பலமுறை நோட்டீஸ் அனுப்பினார்கள். ஆனால் வாடகை செலுத்தாததால் நேற்று காலை நகராட்சி அதிகாரிகள் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு கடைக்கு சென்றனர். பின்னர் பூட்டி இருந்த கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த நாற்காலி உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்து வாகனத்தில் ஏற்றி சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் விரைவில் 40 கடைகள் ஏலம் விடப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.