விவசாய நிலங்களில் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்


விவசாய நிலங்களில் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்
x

பேரணாம்பட்டு அருகே விவசாயி நிலங்களில் ஒற்றை காட்டுயானை புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது.

வேலூர்

பேரணாம்பட்டு அருகே விவசாயி நிலங்களில் ஒற்றை காட்டுயானை புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது.

யானை அட்டகாசம்

பேரணாம்பட்டு அருகே வனப் பகுதியையொட்டி அமைந்துள்ள விவசாய நிலங்கள் மற்றும் தென்னை, வாழை, மா தோட்டங்களில் காட்டு யானைகள் கூட்டம் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து நாசம் செய்து வருகின்றன. சேராங்கல் கற்றாழை கொள்ளி வனப்பகுதிக்குள் சுற்றி திரிந்து வரும் ஒற்றை காட்டு யானை ஒன்று நேற்று மதியம் வனப்பகுதியிலிருந்து வெளியேறி பயங்கர சத்தத்துடன் பிளிறியவாறு அருகிலுள்ள செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் புகுந்து செடிகளை பிடுங்கி எறிந்தும், மாமரக் கிளையை முறித்து முள்வேலி கம்பங்களையும் உடைத்து நாசப்படுத்தியதோடு, அருகிலுள்ள மோகன் பாபு என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுப்பட்டது.

சற்று தொலைவில் களை பறித்துக் கொண்டிருந்த 4 பெண்கள் மற்றும் சிறுமிகள் யானை பிளிறிய சத்தத்தை கேட்டு அலறி கூச்சலிட்டபடி தப்பியோடினர். இதனையறிந்த அங்கிருந்த விவசாயிகள் உடனே தாரை தப்பட்டை அடித்தும், வெடி வைத்தும் சுமார் 2 மணி நேரம் போராடி யானையை விரட்டினர்.

வனத்துறையினர் வரவில்லை

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் காட்டு யானை அட்டகாசம் செய்து கொண்டிருந்ததை நாங்கள் உடனடியாக பேரணாம்பட்டு வனசரக அலுவலகத்திற்கு செல்போனில் தகவல் தெரிவித்தோம். வனத் துறையினர் யாரும் வராததலால் வனசரக அலுவலகத்திற்கு நேரில் சென்று முறையிட்டோம். அப்போது அங்கு பணியிலிருந்த வன ஊழியர் ஒருவர் சேராங்கல் வனப்பகுதி தன்னுடைய பீட் ஏரியா கிடையாது என கூறி திருப்பி அனுப்பியதாக கூறினர்.

மேலும் சுமார் 4 மணி நேரம் கழித்து மாலை 6.15 மணியளவில் பேரணாம்பட்டு வனத்துறையினர் 2 பேர் சேராங்கல் வனப்பகுதிக்கு வந்து பாணம் வெடித்து விட்டு, சென்று விட்டதாத தெரிவித்தனர்.


Next Story