உலா வரும் ஒற்றை யானை
ஆயக்குடி அருகே, உலா வரும் ஒற்றை யானையால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
பயிர்கள் சேதம்
பழனி அருகே கோம்பைபட்டி, ராமபட்டினம்புதூர் ஆகிய கிராமங்கள் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளன. இங்குள்ள தோட்ட பகுதிகளில் கரும்பு, மா, தென்னை, மக்காச்சோளம் உள்ளிட்ட விவசாயம் நடந்து வருகிறது.
இந்நிலையில் மலைப்பகுதியில் உள்ள காட்டுயானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி மலையடிவார தோட்டங்களுக்குள் புகுவது வழக்கம். மேலும் விளைநிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாகி விட்டது.
உலா வரும் ஒற்றை யானை
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமபட்டினம்புதூர், தா.புதுக்கோட்டை பகுதியில் ஒற்றை யானையின் அட்டகாசம் அதிகமாக இருந்தது. குறிப்பாக யானை தாக்கி 2 விவசாயிகள் உயிரிழந்தனர்.
அதைத்தொடர்ந்து வனத்துறையினர் ஒற்றையானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். எனினும் யானை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
விவசாயிகள் அச்சம்
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோம்பைபட்டி, ராமபட்டினம்புதூர் தோட்ட பகுதிகளில் ஒற்றை யானை ஒன்று உலா வருகிறது. பகல் வேளையிலேயே தோட்ட பகுதியில் வலம் வருவதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
அதன்படி நேற்று கோம்பைபட்டியில் உள்ள தோட்ட பகுதியில் ஒற்றை யானை உலா வந்தது. இதைக்கண்ட விவசாயிகள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனச்சரகர் செந்தில் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுழற்சி முறையில் கண்காணிப்பு
இதுகுறித்து வனச்சரகர் கூறும்போது, கோம்பைபட்டி அருகே (ஆர்.எப்.) வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 4 யானைகள் கூட்டமாக உள்ளது. அதில் இருந்து ஒரு யானை மட்டும் அவ்வப்போது தனியாக பிரிந்து தோட்ட பகுதிக்குள் உலா வருகிறது. தற்போது அந்த ஒற்றை யானை பாலூத்து வனப்பகுதியில் உள்ளது.
யானை நடமாட்டத்தை கண்காணிக்க சுழற்சி முறையில் வனத்துறையினர் ரோந்து செல்கின்றனர். விவசாயிகளும் யானை நடமாட்டம் இருந்தால், வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாறாக சத்தம் எழுப்பி, அதை அச்சுறுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றார்.
---------