சேறும்-சகதியுமான மண் சாலை
சீர்காழி 17-வது வார்டில் உள்ள சேறும்-சகதியுமான மண் சாலை தார் சாலையாக மாற்றி அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சி 17-வது வார்டு பகுதியில் சன்சிட்டி நகர் உள்ளது. கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த நகர் பகுதியில் தற்போது 80-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆனால், இப்பகுதியில் போதிய அளவு குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த நகருக்கு செல்லும் சாலை கடந்த 17 ஆண்டுகளாக மண் சாலையாகவே உள்ளது. தற்போது பெய்த மழையின் காரணமாக இந்த மண் சாலை சேறும்-சகதியுமாக காட்சி அளிக்கிறது.
மழைநீர் வடிகால்
மேலும், இந்த நகர் தாழ்வான பகுதியாக இருப்பதாலும், மழைநீர் வடிகால் வசதி இல்லாததாலும் குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி வடிய வழியில்லாமல் துர்நாற்றம் வீசி வருகிறது. மழைக்காலங்களில் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி விடுவதால் இப்பகுதி மக்கள் மழைநீர் வடியும்வரை அருகில் உள்ள உறவினர்கள் அல்லது நண்பர்கள் வீடுகளில் தங்கியிருந்து தண்ணீர் வடிந்த பிறகு வீடு திரும்பும் அவலநிலை நீடித்து வருகிறது.
இந்த நகர் அருகில் செல்லும் கழுமலையாறு பாசன வாய்க்கால் கரைகள் வலுவிழந்ததால் வாய்க்காலின் தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகிறது. ஆகவே, இந்த நகர் பகுதிக்கு போதிய அளவு குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி மற்றும் மண்சாலையை தார் சாலையாக மாற்றித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கவுன்சிலர் கோரிக்கை
இதுகுறித்து சீர்காழி நகராட்சி 17-வது வார்டு கவுன்சிலர் பொறியாளர் ரம்யா தனராஜ் கூறுகையில், எனது வார்டில் சன் சிட்டி நகர் உள்ளது. இந்த நகரில் தற்போது 80-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் இப்பகுதி மக்கள் அதிகளவு சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இங்குள்ள சாலை கடந்த 17 ஆண்டுகளாக மண்சாலையாகவே உள்ளதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஆகவே, இப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைேவற்றி கொடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இப்பகுதி மக்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாசன வாய்க்கால் தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள் புகாதவாறு கரைகளை பலப்படுத்தி தர வேண்டும் என கூறினார்.