தமிழகத்தில் சிறுதானியங்கள் மேம்பாட்டு வாரியம் அமைக்க வேண்டும் - வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை
தமிழகத்தில் சிறுதானியங்கள் மேம்பாட்டு வாரியம் அமைக்க வேண்டும் என வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை விடுவிக்கப்பட்டது
2023-24-ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கைக்கான பரிந்துரைகள் குறித்து, வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ரத்தினவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒருங்கிணைந்த கூட்டு விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரப்புகளை எல்லாம் நீக்கி விட்டு சுமார் 1000 ஏக்கர் அளவில் இணைந்து விவசாயம் செய்ய விவசாயிகள் ஊக்குவிக்க வேண்டும். வரப்பில்லா விவசாயம் செய்தால்தான் நவீன தொழில்நுட்ப வேளாண் உபகரணங்களை பயன்படுத்தி உற்பத்தியையும், தரத்தையும் அதிகரிக்க முடியும். இதன் மூலம், சிறு விவசாயிகள் அதிக வருமானம் ஈட்ட முடியும். சிறுதானியங்கள் மேம்பாட்டு வாரியம் தமிழகத்தில் அமைக்க வேண்டும். சிறு தானியங்கள் அதிக அளவில் விளையும் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 18 மாவட்டங்களிலும் தற்போது சிறுதானியங்கள் விவசாயம் செய்யப்படும் நில அளவை அதிகரிப்பதற்கான இலக்கை நிர்ணயித்து செயல்பட வேண்டும். சிறு தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் மதிப்பு கூட்டு பெற்ற பொருட்களை பயன்படுத்த மக்கள் ஊக்கப்படுத்தும் சூழலில், அவற்றிற்கு ஜி.எஸ்.டி. 18 சதவீதம் என்பது நியாயம் அல்ல. ஜி.எஸ்.டி. வரி விலக்கு அளிக்க வேண்டும் அல்லது 5 சதவீதமாக அதனை குறைக்க வேண்டும். வேளாண்மையை ஒரு பாடமாக பள்ளி கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். தென் மாவட்டங்களை உணவு பதனீட்டு தொழில் மையமாக அறிவித்து ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும். மாநிலத்திற்குள் உள்ள நதிகளை இணைக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து விரைந்து முடிக்க வேண்டும். இதற்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.