தொழிலாளர்கள் வைத்த தீயால் சாலையை சூழ்ந்த புகை மண்டலம்; போக்குவரத்து பாதிப்பு
தொழிலாளர்கள் வைத்த தீயால் சாலையை சூழ்ந்த புகை மண்டலத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அஞ்சுகிராமம்,
தொழிலாளர்கள் வைத்த தீயால் சாலையை சூழ்ந்த புகை மண்டலத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தீ விபத்து
அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோப்பில் உள்ள கழிவு ஓலைகளை அங்கு வேலை செய்த தொழிலாளிகள் தீ வைத்து கொளுத்தியதாக தெரிகிறது. அது அருகில் உள்ள புதர், செடி, கொடிகள் மீது பற்றி எரிந்தது. மேலும் அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது. இதனால் தொழிலாளிகள் செய்வதறியாமல் திகைத்தனர். உடனே கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திற்கும், மயிலாடி மின்சார வாரியத்திற்கும் தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் மின் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர். மேலும் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு நிலையத்தினர் சுமார் ½ மணி நேரம் போராடி அணைத்தனர்.
புகை மண்டலம் அஞ்சுகிராமம்-நாகர்கோவில் மெயின் ரோட்டிலும் பரவியதால் வாகன ஓட்டிகள் புகையை கடந்து போக முடியாமல் தவித்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.