சார் பதிவாளர் அலுவலக வளாகத்தில் புகுந்த பாம்பு
சார் பதிவாளர் அலுவலக வளாகத்தில் புகுந்த பாம்பு பிடிபட்டது.
பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே மதரசா ரோடு, சூப்பர் நகரில் உள்ள சார் பதிவாளர் அலுவலக வளாகம் பராமரிப்பின்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் சார் பதிவாளர் அலுவலக வளாகத்திற்குள் ஒரு பாம்பு புகுந்து, புதர் மண்டியுள்ள இடத்தில் ஊர்ந்து சென்றது. அப்போது அங்கு பத்திரம் பதிவு செய்ய வந்திருந்த பொதுமக்கள், பாம்பை கண்டு அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் நவீன கருவி மூலம் பாம்பை லாவகமாக உயிருடன் பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இதற்கிடையே பாம்பை பிடித்து சென்ற பிறகே சார் பதிவாளர் அலுவலக ஊழியர்களும், அங்கு வந்த பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பிடிபட்ட பாம்பு சுமார் 10 அடி நீளம் இருந்ததாகவும், கட்டுவிரியன் வகையை ேசர்ந்தது என்றும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். மேலும் பெரம்பலூர் சார் பதிவாளர் அலுவலக வளாகத்தை தூய்மைப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.