ரோப்கார் நிலையத்தில் புகுந்த பாம்பு
பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில் பாம்பு ஒன்று புகுந்தது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல ரோப்கார், இழுவை ரெயில் சேவை உள்ளது. இதற்காக அடிவாரத்தில் ரோப்கார் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகே உள்ள பகுதியில் மரங்கள் வளர்ந்து வனப்பகுதி போல் காணப்படுகிறது. இங்கு ஏராளமான பாம்புகள் நடமாட்டம் உள்ளது.
இந்நிலையில் நேற்று காலை சுமார் 7 மணி அளவில் அடிவாரத்தில் ரோப்கார் மூலம் மலைக்கோவில் செல்வதற்கு பக்தர்கள் நுழைவுச்சீட்டு பெற்று காத்திருப்போர் அறைக்கு வந்தனர். அப்போது அறை அருகே உள்ள பகுதியில் பாம்பு ஒன்று இருப்பதை பக்தர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ரோப்கார் நிலையத்தில் உள்ள ஊழியர்களிடம் தெரிவித்தனர். உடனே அவர்கள் பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் சுமார் அரை மணி நேரம் போராடி 5 அடி நீளம் உள்ள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை பழனி அருகே உள்ள வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.